பக்காத்தானுக்கு பரப்புரை செய்வதற்காக நாடு திரும்புகிறார் சுயேச்சை துப்பறிவாளர் பாலா

1balaமங்கோலிய பெண் அல்டான்துனியா கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு சத்திய பிரமானங்களைச் செய்ததன்வழி பிரபலமான முன்னாள் சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறார்.

மலேசியாகினியுடன் மின்னஞ்சல்வழி தொடர்புகொண்ட பாலசுப்ரமணியம், வரும் பொதுத் தேர்தலிலில் பக்காத்தான் ரக்யாட்டுக்காக நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்யப்போவதாகக் கூறினார்.

“ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்புவேன். நிரந்தரமாக இருக்க விரும்புகிறேன்.

“மாற்றம் தேவை. பக்காத்தான் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். பொதுத் தேர்தலில் நாடு முழுக்கப் பயணம் செய்து பக்காத்தான் பிரச்சாரத்தில் உதவ விரும்புகிறேன்”, என்றாரவர்.

இதை அவரின் வழக்குரைஞர் அமரிக் சிங் சித்துவும் உறுதிப்படுத்தினார்.

குடிநுழைவுத் துறை ஒரு வேளை கெடுபிடி காட்டலாம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தாமும் கோலாலும்பூர் அனைத்துல விமான நிலையத்துக்குச் செல்லப்போவதாக அமெரிக் கூறினார்.

1bala1‘நான் தவறேதும் செய்யவில்லை’

இந்தியாவில் தங்கியுள்ள பாலசுப்ரமணியம் பல தடவை மலேசியா வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு வந்திருந்தபோது மலேசியாகினிக்கு நேர்காணல் வழங்கிய பாலசுப்ரமணியம், மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் களங்கம் உண்டுபண்ண தமக்குக் கையூட்டு கொடுக்கும் முயற்சி நடந்ததாகக் கூறினார்.

மலேசியா திரும்பியதும் பொதுவில் நடமாட அச்சம் கொள்வாரா என்று வினவியதற்கு இல்லை என்றார்.

“எதற்காக என்னைக் கைது செய்வார்கள்? என்ன தவறு செய்தேன்? முன்பு இங்கு வந்தேன், மலேசியாகினியைச் சந்தித்தேன். திரும்பிச் சென்றேன்(இந்தியாவுக்கு). அப்போது யாரும் தடுக்கவில்லையே.

“நான் திரும்பி வரும் தேதி உறுதியாகிவிட்டது. பிரச்னை இருக்கும் என நான் நினைக்கவில்லை”, என்றார்.

பாலசுப்ரமணியம் 2008-இல் செய்த முதலாவது சத்திய பிரமாணத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அல்டான்துனியாவுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர், அடுத்த நாள் இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்த அவர், முதல் சத்திய பிரமாணத்தை மீட்டுக்கொள்வதாகவும் அது நெருக்குதலின் காரணமாக செய்யப்பட்டது என்றும் கூறினார்.