சிலாங்கூரில் தண்ணீர் தொழில் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு ஈடாக மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளது குறித்து, சபாஷ் நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரர் என்ற முறையில் கூட்டரசு அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டியுள்ளதாக Puncak Niaga Holdings Bhd கூறுகிறது.
சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் KDEB நிறுவனம் அனுப்பிய கடிதம் நேற்று அதன் துணை நிறுவனங்களான Puncak Niaga (M) Sdn Bhd-க்கும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd (Syabas)-க்கும் கிடைத்ததாக புஞ்சாக் நியாகா நிர்வாகத் தலைவர் ரோஸாலி இஸ்மாயில் கூறினார்.
“நாங்கள் சிலாங்கூர் அரசாங்கம் கொடுக்க முன் வந்துள்ளதை முழுமையாக ஆய்வு செய்வோம். இயக்குநர்கள் வாரியம், சிறுபான்மை பங்குதாரர்கள், நிதி நிறுவனங்கள், நிறுவனங்களுடன் தொடர்பு உடைய அமைப்புக்கள் ஆகியவற்றுடன் நாங்கள் கலந்தாய்வு செய்வோம்,” என அவர் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள Syabas, Puncak Niaga Sdn Bhd, Konsortium Abass Sdn Bhd, Syarikat Pengeluar Air Selangor Holding (Splash) ஆகியவற்றை எடுத்துக் கொள்வதற்கான தொடங்குவதற்கு மொத்தம் 9.65 பில்லியன் ரிங்கிட் கொடுக்க விரும்புவதாக தெரிவிக்குமாறு KDEB-க்கு நேற்று சிலாங்கூர் ஆட்சி மன்றம் அனுமதி அளித்தது.
அந்த 4 நிறுவனங்களையும் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையில் அவற்றின் கடன் சுமைகளை ஏற்றுக் கொள்வதும் அடங்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கம் கொடுக்க விரும்புவதை ஏற்காமல் இருப்பது சிலாங்கூர் மக்கள் தர விரும்புவதை ஏற்க மறுப்பதற்குச் சமம் எனப் பொருள்படும் அறிக்கையை அப்துல் காலித் விடுத்துள்ளது குறித்து ரோஸாலி ஏமாற்றம் தெரிவித்தார்.
முன்னாள் நிறுவனத் தலைவர் என்ற முறையில் அப்துல் காலித், பங்குப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு பொது நிறுவனம் இயங்கும் முறையை அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
சலுகை ஒப்பந்தத்தை மந்திரி புசார் பொருட்படுத்தவில்லை என்பதையும் ஒரு பொது நிறுவனம் இயங்கும் முறையை மந்திரி புசார் அறியவில்லை என்பதையும் அந்த அறிக்கை உணர்த்துவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.