“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – வெளியாகிறது மற்றொரு அதிர்ச்சி அறிக்கை

human rights watchதமிழ் பெண்கள் மீதான சிறிலங்கா அரசபடைகளின் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது.

140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள், பாலியல் துன்புறுத்தல்கள், மூன்றாந்தர சித்தரவதைகள் குறித்து இந்த அறிக்கை விபரிக்கவுள்ளது.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்முறைகள்- என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள இந்த அறிக்கையில், 2006ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடையில் இரகசிய மற்றும் அதிகாரபூர்வ தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற 75 பாலியல் வல்லுறவுகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த விபரங்கள் இடம்பெறவுள்ளன.

“2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், தடுப்புக்காவலில் பரந்தளவிலான பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளன.

அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் சிறிலங்காப் படைகளாலும் காவல்துறையினராலும், தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது” என்று அந்த அமைப்பின் ஆசிய பிரிவு பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா படைகளால் தடுப்புக்காவலில் உள்ள எண்ணிலடங்காத தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவை போர்க்காலக் கொடுமைகள் மட்டுமல்ல, தற்போதும் தொடர்கின்றன.

விடுதலைப் புலிகள் சந்தேகநபர் என்று கைது செய்யப்படும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தீவிரமான ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்கா படையினரின் பாலியல் குற்றங்களை, விடுதலைப் புலிகள் ஆதரவு பரப்புரை என்றும், பொய் என்றும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இந்த மீறல்கள் குறித்து விசாரிக்கத் தவறியுள்ளதால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மூலம் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

TAGS: