இஸ்லாம் மீதான டிஏபி நிலை எனக் கூறப்பட்டு சுமத்தப்பட்ட “தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள்” தொடர்பில் பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக டிஏபி இன்று போலீசில் புகார் செய்தது.
நஜிப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரமில்லாதவை என அந்தப் புகாரைச் செய்த டிஏபி குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் தேசியப் பிரச்சாரத் துணைச் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி கூறினார்.
கூட்டரசு அரசமைப்பின் மூன்றாவது பிரிவில் கூறப்பட்டுள்ள இஸ்லாத்தின் நிலை குறித்து ஒரு போதும் கேள்வி எழுப்பியதில்லை என ஜைரில் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்,’
“இஸ்லாத்தின் நிலை டிஏபி அமைப்பு சாசனத்தில் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட ஷா அலாம் பிரகடனத்திலும் அது இடம் பெற்றுள்ளது,” என்றார் அவர்.
“ஆகவே அந்தக் குற்றச்சாட்டுக்கள் தீய நோக்கம் கொண்டவை, பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக குறிப்பாக டிஏபிக்கு எதிராக இன, சமய உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டவை என்பது வெள்ளிடைமலை.”
ஜைரில் ‘நஜிப்: நனி சிறந்த எதிர்காலத்துக்கு பாரிசானுக்கு வாக்களியுங்கள்” என்னும் தலைப்பில் தி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி பற்றி குறிப்பிட்டார்.
“பிகேஆர்-கட்சிக்கு அளிக்கும் வாக்கு aqidah-வை அழித்து விடும், பாஸ் கட்சிக்கான வாக்கு முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி விடும், டிஏபிக்கு அளிக்கும் வாக்கு இஸ்லாத்தை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும்” என நஜிப் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
கோலத் திரங்கானுவில் கடந்த வார இறுதியில் Janji DiTepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) நிகழ்ச்சியை தொடக்கி வைத்த போது நஜிப் அவ்வாறு கூறினார்.
பினாங்கில் இஸ்லாத்தின் வளர்ச்சி
பினாங்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பக்காத்தான் நிர்வாகம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தான் துணையாக இருப்பதை மெய்பித்துள்ளதாக ஜைரில் மேலும் சொன்னார்,
“முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு மாடிகளைக் கொண்டிருந்த ஷாரியா நீதிமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்க 80 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“மாநில அரசாங்கம் ஹலால் தொழிலையும் மேம்படுத்தியுள்ளது, முஸ்லிம் மய்யத்துக் கொல்லைகளை விரிவு செய்ய அது நிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது, பள்ளிவாசல் ஊழியர்களுக்கான அலவன்ஸை அது 80 விழுக்காடு அதிகரித்துள்ளது, Sekolah Agama Rakyat என்ற சமயப் பள்ளிகளுக்கும் அது முதன் முறையாக ஆண்டு ஒதுக்கீடுகளைக் கொடுத்து வருகின்றது.”
நஜிப்பின் “தவறான, அவதூறான” கருத்துக்கள் ஒரு குற்றம் என வருணித்த ஜைரில் டிஏபி புகாரை போலீசார் உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். டிஏபிக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக ‘மருட்டல்கள்’ விடுக்கப்படுவதை அப்போது தான் தடுக்க முடியும் என்றார் அவர்.