மாஸ்கோ: காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில், ஆப்கனை சேர்ந்த, 10 இலட்சம் பேரும், 15 ஆயிரம் ரஷ்ய வீரர்களும், கொல்லப்பட்டனர்.
மேலும், 200 ரஷ்ய வீரர்கள் காணாமல் போயினர். இவர்களில், 20 பேர் தாமதமாக நாடு திரும்பினர். காணாமல் போனவர்களில் சிலர் இறந்து விட்டனர். எனினும், ஒரு சிலர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பாக்ரடின் காகிமோவ் என்ற ரஷ்ய வீரர், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த, 1980ல் ஆப்கனில் நடைபெற்ற போரில் காயமுற்ற அவரை, உள்ளூர் மக்கள் காப்பாற்றி தங்கள் பராமரிப்பில் தங்க வைத்தனர்.
அவர், தன் பெயரை ஷேக் அப்துல்லா என மாற்றி கொண்டு, ஆப்கன் பெண்ணை திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் அந்த பெண் இறந்து விட்டார். மூலிகை மருத்துவராக வேலை பார்த்து வந்த அவரை, ரஷ்யா சமீபத்தில், கண்டுபிடித்துள்ளது. இத்தகவலை அறிந்த, அவரது உறவினர்கள் அவரை மீண்டும் சந்திக்க போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.