தீவிரவாதிகள் சரணடையாத வரையில் சண்டை நிறுத்தம் இல்லை

najib_sabah_standoffமூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.

லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அவர் கோரினார்.

“சண்டை நிறுத்தம் செய்ய முன் வந்ததற்கு மலேசியாவின் பதில் என்ன என்று என்னிடம் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கொனோ வினவினார்.”

“அவர்கள் தங்கள் ஆயுதங்களை நிபந்தனை ஏதுமின்றி ஒப்படைத்து விட்டு எங்களிடம் சரணடைய வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும்,” என அவர் இன்று பிற்பகல் நடப்பு நிலவரம் குறித்து பெல்டா சஹாபாட் இல்லத்தில் விளக்கம் பெற்ற பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அதனை, பிப்ரவரி 12ம் தேதி சபா எல்லைக்குள் ஊடுருவி கம்போங் தண்டுவோ-வை கைப்பற்றிய அந்த தீவிரவாதக் கும்பல் கூடிய விரைவில் செய்ய வேண்டும் என நஜிப் கேட்டுக் கொண்டார்.

அது வரையில் தீவிரவாதிகளை வெளியாக்கும் கூட்டு போலீஸ் இராணுவ நடவடிக்கையான Ops Daulat தேவைப்படும் காலம் வரையில் தொடரும் எனப் பிரதமர் மேலும் கூறினார்.

“நாங்கள் அவர்களை முற்றாக ஒழிக்கும் வரையில் அல்லது அவர்கள் சரணடையும் வரையில் அது தொடரும்,” என்றார் அவர்.

நஜிப் ஐநா-விடம் சொல்கிறார்: ‘நாங்கள் ஏற்கனவே பேச்சு நடத்தி விட்டோம்’

sulu1கலந்துரையாடல் வழி பூசலுக்குத் தீர்வு காண வேண்டும் என ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் விடுத்த வேண்டுகோளுக்கும் நஜிப் பதில் அளித்தார்.

“நாங்கள் ஏற்கனவே அதனைத் தான் செய்தோம். தாக்குதலைத் தொடங்காமல், அந்தக் கும்பல் அமைதியாக பிலிப்பின்ஸுக்குத் திரும்பும் பொருட்டு நான்கு சுற்றுப் பேச்சுக்களை நடத்தினோம்.”

“எங்களுடைய எட்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட பின்னரே நாங்கள் தாக்குதலைத் தொடங்கினோம்,” என்றார் அவர்.

ஆகவே மலேசியா மனித உரிமைக் கோட்பாடுகளை நிலை நிறுத்தியுள்ளது என நஜிப் சொன்னார்.

என்றாலும் ஊடுருவல்காரர்கள் நிபந்தனையில்லாமல் இப்போது சரணடைய வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக ஜமாலுல் அறிவித்த தன்மூப்பான சண்டை நிறுத்தத்திற்கு இணங்க மலேசியாவும் சண்டை நிறுத்தம் செய்யும் சாத்தியத்தை தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடியும் நிராகரித்தார்.