இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது.
இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்னையை அனைத்துலக சமூகம் அங்கீகரித்துள்ளதாக தாம் பார்ப்பதாகக் கூறும், அந்த அமைப்பின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் குறித்த விடயங்களுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன், ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே என்று கூறியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு அனைத்துலக பொறிமுறையும், அனைத்துலக சுயாதீன விசாரணையுமே தமது கோரிக்கையாக இருப்பதாகக் கூறும் அவர், ஆனால் இந்த தீர்மானத்தில் அவை இடம்பெறவில்லை என்று கவலை வெளியிட்டார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமை பேரவை ஒரு கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் கடந்த 7-ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று முன்தினம் ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது.
இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற வேண்டும். மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
கியூபா வழக்கமாக மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நாடு தான். ஆனால், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதை கியூபா எதிர்ப்பது, மாபெரும் துரோகமாகும்.
சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் நட்பு நாடுகள் என்ற வகையில் இந்தத் தீர்மானத்தை அவர்கள் எதிர்ப்பது எதிர்பார்த்தது தான். ரஷ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்க எதிர்ப்பும் மற்றும் இந்தியாவுக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற கவலையும் தான் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும்.