நைரோபி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார்.
டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்று கூறுகிறார் மாலிக்.
இருப்பினும் கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் இவர் தோல்வியைச் சந்தித்துள்ளார். இவருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் இடையே இன்னும் நல்ல தொடர்பு உள்ளதாம். அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்களாம்.
வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் போய் தம்பியைப் பார்த்து விடுவாராம் மாலிக். கணக்காளராகப் பணியாற்றி வரும் மாலிக், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.