வாடிகன்: ஐரோப்பா அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர், 1,300 ஆண்டுகளுக்கு பின், போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவராக இருந்த பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது.
இத்தாலி நாட்டின், வாடிகன் நகரில், கத்தோலிக்க திருச்சபைகளின் புதிய போப் ஆண்டவர் தேர்வுக்கான, 115 கர்டினால்கள் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் (கான்கிளேவ்) நடந்தது. இங்குள்ள சின்ஸ்டின் ஆலயத்தில், 12ம் தேதி துவங்கிய ரகசிய கூட்டத்தின்போது அன்றைய தினம் மதியம் முதல் முறையாக கரும்புகை வெளியேறியது.
புதிய போப் ஆண்டவர், அவ்வளவு எளிதாக போப் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதால், முதல் முறை வெளியேறும் புகை கரும்புகையாகவே இருக்கும் என்பது அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு தெரியும். இதனால், அவர்களிடம் பெரிய ஏமாற்றம் ஏற்படவில்லை.
இருப்பினும், தொடர்ந்து நடந்த ரகசிய கூட்டத்தில், நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணிக்கு, இரண்டாம் முறையாக கரும்புகை வெளிப்பட்டபோது, பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர். அன்றிரவு, 11:38 மணிக்கு ஐந்தாவது முறையாக நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிறகு, புகைப் போக்கி வழியே வெண்புகை வெளிப்பட்டதும், பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘ஹபே மூஸ் பாப்பாம்’ (நமக்கு புதிய போப் கிடைத்து விட்டார்) என இத்தாலிய மொழியில் கோஷமிட்டனர். தொடர்ந்து ஆலய மணிகள் முழங்கின.
தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (வயது 76) தேர்வு செய்யப்பட்டதை செயின்ட் பீட்டர்ஸ் ஆலயத்தின் பாதுகாவலர்கள் அறிவித்தனர். அவர் இனி, ‘போப் பிரான்சிஸ் – 1’ என அழைக்கப்பட உள்ளார். ஐரோப்பா நாடுகளைச் சேராத ஒருவர், 1,300 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் போப் ஆண்டவராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ், 266வது போப் ஆண்டவர் ஆவார்.