காரகஸ்: அன்னிய நாட்டு உளவுத்துறையினரின் சதிச் செயலால்தான் அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணமடைந்தார் என்று குற்றசசாட்டு எழுந்திருப்பதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று வெனிசூலா நாட்டு எண்ணை வளத்துறை அமைச்சர் ரபேல் ரமீரேஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபரின் மரணத்திற்கு வெளிநாட்டு உளவுத்துறையினரின் சதி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும; விசாரணைக் ஆணையம் அமைக்கப்படும்.
அமெரிக்கா, இஸ்ரேலின் கைவரிசையையும் இதில் மறுக்க முடியாது. அதிபர் மரணம் தொடர்பான ஆதாரங்களை சிறப்பு விசாரணைக் ஆணையம் வழங்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
2011ம் ஆண்டு சாவேஸுக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எதிரி நாடுகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதைச்சுட்டிக் காட்டி ராமீரேஸ் கூறுகையில், நிச்சயம் சாவேஸ் இயற்கையாக மரணமடையவில்லை. யாசர் அராபத்துக்கு நேர்ந்தது போலவே சாவேஸுக்கும் நடந்துள்ளது; இதில் சந்தேகமில்லை என்றார் அவர்.