பிஎன்-உடன் தேர்தல் ஒப்பந்தம் ஏதுமில்லை என்கிறார் வேதமூர்த்தி

hindraf_hunger_viratham_06“பிரதமர் ஹிண்ட்ராப்பை அழைத்தால் – ஹிண்ட்ராப் அவரது அங்கீகாரத்துக்கு தனது பெருந்திட்டத்தைச் சமர்பிக்கும். ஆனால்,  அவர் (பிரதமர்) இன்று வரை அதனை செய்யவில்லை.”

“என்றாலும் பக்காத்தானிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பதிலுக்கும் பிஎன் பதிலுக்கும் இடையில் பல முக்கிய வேற்பாடுகள் உள்ளன. பிஎன் எங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அது தனது தற்போதைய நிலையிலிருந்து வெகு தொலைவு வரவேண்டும்.”

அது தனது அடிப்படைக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே அதன்  அர்த்தமாகும்.  நான் அந்த மேம்பாடுகள் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன். அவற்றின் அடிப்படையில் தேர்தல்களில் என்ன நிலையை எடுக்க வேண்டும் என்பதை என் ஆதரவாளர்களுடன் இணைந்து இறுதி முடிவு செய்வேன்,” என கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.

அந்தப் பேட்டி தொடருகின்றது:

கேள்வி: உங்கள் உண்ணாவிரதத்தின் உண்மையான நோக்கம் என்ன ?

வேதமூர்த்தி: நாங்கள் எங்கள் உரிமைகளை, எங்கள் கௌரவத்தை நாடுகிறோம். எதுவும் இல்லை. அரசாங்கம் இந்தியர்களுக்கு எல்லா உரிமைகளும் இருப்பதாகத் தொடர்ந்து சொன்னாலும் அது இந்தியர்களை ஏமாற்றியுள்ளது. சம உரிமையும் வாய்ப்புக்களும் இல்லாமல் நாம் கடந்த 57 ஆண்டுகளாக கௌரவமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் மாற்றத்தைச் செய்யுமாறு அரசாங்கத்தையும் காத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தையும் நெருக்குவதே என் உண்ணாவிரதத்தின் உண்மையான நோக்கம்.

கேள்வி: பக்காத்தான் உங்களுக்கு இறுதிப் பதில் கொடுப்பதை எது தடுக்கிறது ?

hindraf_hunger_viratham_02வேதமூர்த்தி: எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சமர்பித்த பெருந்திட்டத்தைக் கொள்கை அளவில் ஒப்புக் கொள்வதாக அவர்கள் கூறினர். சில சிறிய திருத்தங்களும், மொழி, சொற்கள் அடிப்படையில் திருத்தங்களும் தேவைப்படுவதாகவும் எங்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உண்மையில் விரும்புவது என்ன என்பதை எங்களுக்குத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

அன்வார் இப்ராஹிமுடன் நாங்கள் நவம்பர் முதல் தேதி முதல் கூட்டத்தை நடத்தினோம். அவருக்கு இந்தியர் வாக்குகளைப் பெற்றுத் தர முடியும் என்றும், அவருக்காக பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் நான் அவரிடம் கூறினேன். அவருக்கு எந்தச் செலவும் இல்லாமல் 2,000 தொண்டர்களுடைய சேவைகளை திரட்ட முடியும் என்றும் நான் சொன்னேன். அந்தச் சேவைகளுக்கு ஈடாக பக்காத்தான் வரும் பொதுத் தேர்தலில் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் 10 சட்டமன்றத் தொகுதிகளையும் ஹிண்ட்ராப்புக்கு வழங்க வேண்டும் என நான் யோசனை கூறினேன். அந்த வேண்டுகோள் மேலும் விவாதத்திற்கு உரியது என்றும் நான் அப்போது தெளிவுபடுத்தினேன்.

என்றாலும் இடங்களுக்கான எங்கள் வேண்டுகோளுக்கு முன்நிபந்தனை மட்டும் நாங்கள் விதித்தோம்- பெருந்திட்டத்தை அங்கீகரிக்காமல் நாங்கள் எந்த இடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதே அதுவாகும்.

நாங்கள் பக்காத்தான் தேர்தல் வியூகவாதிகளைச் சந்திக்க வேண்டும் என அன்வார் இப்ராஹிம் யோசனை கூறினார். அதனைச் செய்தோம்.

இன்னும் முடிவு செய்யாத நிலையிலிருக்கும்  50 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் ஒவ்வொருவரையும்  எவ்வாறு கொண்டுவர முடியும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் நாங்கள் விளக்கினோம்.

இந்தியர் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என அவர்கள் எண்ணக் கூடாது என்றும் நாங்கள் தெளிவுபடுத்தினோம். நாங்கள் ஒவ்வொரு பக்காத்தான் தலைவரிடமும் அதனையே திரும்பத் திரும்பச் சொன்னோம். “உங்களுக்கு எங்கள் உதவி தேவை இல்லை என்றால் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்,” என்றும் அவர்களிடம் சொன்னோம். அவர்களின் ‘அமைதியே’ எங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைத்த கண்ணுக்கு தெரிந்த ஒரே பதிலாகும்.

ஆனால் அவர்கள் ஏதோ ஒன்று சொன்னார்கள். அதுதான் ஹிண்ட்ராப்பிடமிருந்து ‘தேர்தல் ஒத்துழைப்பை’ தாங்கள் நாடுவதாக அவர்கள் சொன்னார்கள்.

hindraf_hunger_viratham_04கேள்வி: பக்காத்தான் உங்களுடைய பெருந்திட்டத்தை ஏற்றுக் கொண்டு இடங்களுக்கான வேண்டுகோளை நிராகரித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

வேதமூர்த்தி: எங்கள் பெருந்திட்டத்தை அங்கீகரிக்கிறோம், ஆனால் இட ஒதுக்கீடு இல்லை என பக்காத்தான் சொன்னாலும் நாங்கள் ஒப்புக் கொண்டிருப்போம். பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் அப்போது இந்திய வாக்காளர்களிடம் சொல்வோம். ஆனால் ‘தேர்தல் ஒப்பந்தம்’ ஏதுமிருக்காது. பக்காத்தானுக்குப் பிரச்சாரம் செய்ய எங்கள் படைகளை களத்திற்கு அனுப்ப மாட்டோம் என்பதே அதன் அர்த்தமாகும்.

இட ஒதுக்கீடுகளுக்கான ஹிண்ட்ராப் வேண்டுகோளை பாஸ், டிஏபி, பிகேஆர் உயர் தலைவர்கள் யாரும் இது வரை நிராகரிக்கவில்லை என்பதையும் அது குறித்து அவர்கள் புகார் செய்யவில்லை என்பதையும் பொது மக்கள் உணர வேண்டும். பக்காத்தானில் கீழ் நிலையில் உள்ள இந்திய தலைவர்களே அது பற்றி புகார் செய்கின்றனர்.

கேள்வி: பிரதமர் உங்களை அழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

வேதமூர்த்தி: நான் நாடு திரும்பிய நாள் தொடக்கம் 57 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தியர் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட வேண்டும் என்ற என் கோரிக்கையில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். அரசாங்கத்துக்கும் காத்திருக்கும் அரசாங்கத்துக்கும் என் கோரிக்கை ஒன்றுதான்.

பிரதமர் என்னை அழைத்தால் பக்காத்தானிடன் நான் சமர்பித்த பெருந்திட்டத்தை அவரிடம் சமர்பித்து அங்கீகாரம் அளிக்குமாறு கேட்டுக் கொள்வேன்.  அவர்கள் எங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அவர்கள் தங்களது தற்போதைய நிலையிலிருந்து வெகு தொலைவு வரவேண்டும்.

அவர்களுடைய அடிப்படைக் கொள்கைகளில்  குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அதன் பொருளாகும்.

அது எளிதல்ல. எல்லாவற்றுக்கும் பின்னர் அவர்கள் எங்கள் திருப்திக்கு பெருந்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் அது எல்லா மலேசியர்களுக்கும் நாங்கள் உருவாக்கிய பெரும் புரட்சியாக அமையும். நான் அந்த மாற்றங்களை மக்களுக்குத் தெரிவிப்பேன். பிஎன் -னுக்கு ஆதரவு வழங்கும் சாத்தியம் பற்றி முடிவு செய்ய எங்கள் ஆதரவாளர்களுடைய தேசிய மாநாட்டை நான் அவசரமாக கூட்டுவேன்.

கேள்வி: நீங்கள் ஏன் மஇகா வசமுள்ள அல்லது போட்டியிட்ட இடங்களைக் கோருகின்றீர்கள்,? அம்னோ அல்லது இதர பிஎன் கட்சிகளிடம் உள்ள இடங்களைக் கேட்கவில்லை ?

வேதமூர்த்தி: இந்தியர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பக்காத்தானுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொள்வதின் மூலம் ஆட்சி மாற்றத்தை நாங்கள் நாடுகிறோம். நாங்கள் மஇகாவை வீழ்த்த விரும்புகிறோம். ஏனெனில் அது பிஎன் -உடன் இருக்கும் கட்சி ஆகும். இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டதற்கு காரணம் பிஎன் ஆகும்.

உண்மையில் மஇகா, பிஎன் -உடன் ஒத்துழைத்ததின் வழி 57 ஆண்டு கால பிஎன் ஆட்சியில் இந்தியர்கள் ஒதுக்கப்படுவதற்கு பெரும்பங்காற்றியுள்ளது. அந்த வகையில் நாங்கள் இப்போது பக்காத்தான் வசமுள்ள தொகுதிகளைக் கேட்கவில்லை. மஇகா-வை முற்றாக துடைத்தொழிக்க பக்காத்தானுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.

ஹிண்ட்ராப்பின் ஆறு சிறப்பு யோசனைகளான 1) உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள 800,000 தோட்டத் தொழிலாளர்கள் 2) 350,000 நாடற்ற மக்கள் 3) போதுமான சமமான கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டது 4) சம நிலையில்லாத வேலை வாய்ப்புக்கள், வர்த்தக வாய்ப்புக்கள் 5) அரச மலேசியப் போலீஸ் படைக்குள்ள விதி விலக்கு 6) மனித உரிமை நடைமுறைகள் தரம் ஆகியவற்றில் ஐந்து அம்சங்களை தமது கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம் முன் வந்துள்ளார். அவை வருமாறு அ) இந்தியர்களும் விடுபட்டு விடாமல் ‘நீண்ட காலமாகத் தொடரும் நாடற்ற மக்கள் பிரச்னையை’ பக்காத்தான் நிர்வாகத்தில் முதல் 100 நாட்களில் தீர்ப்பது ஆ) பள்ளிப்படிப்பை முடிக்கின்றவர்களுக்கு -அதில் இந்திய சமூகத்துக்கு முக்கியப் பங்களிக்கும் வகையில் தொழில்நுட்ப பயிற்சியையும் வேலை வாய்ப்புக்களையும் வழங்குவது, இ) தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு முழு நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வது, அவற்றுக்குத் தேசியக் கல்வித் தரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை வழங்குவது ஈ) நாடு முழுவதும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலப்பட்டாவைக் கொண்ட கொண்ட வீடுகளைக் கட்ட உதவுவது உட்பட தாங்கக் கூடிய விலையில் வீடுகளைக் கட்ட அரசாங்க தேசிய வீடமைப்பு வாரியத்தை அமைப்பது உ) போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பது. பிஎன் -னிடமிருந்து எதுவும் வராத வேளையில் பக்காத்தானிடமிருந்து நீங்கள் மேலும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் ?

hindraf_hunger_viratham_05சுருக்கமாகச் சொன்னால் இந்தியர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான  ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை அன்வார் வழங்க முன்வந்தது எந்த வகையிலும் உண்மையாக பிரதிபலிக்கவில்லை. ஆறு பெருந்திட்ட யோசனைகளும் 23 சிறப்பு பிரிவுகளாகவும் திட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஐந்து மட்டுமே தேர்வு செய்து தீர்க்க முன் வந்துள்ளார்.

அரசாங்கம் ஊக்குவித்த மாற்றத்தினால் மாற்று நிலமோ குடியிருக்க வீடுகளோ வேலை வாய்ப்புப் பயிற்சிகளோ சிறப்பு பொருளாதார வளர்ச்சித் திட்டங்களோ இல்லாமல் இடம் பெயர்ந்த 800,000 தோட்டத் தொழிலாளர்கள் என்ற அடிப்படைப் பிரச்னையை அன்வார் தொடவில்லை.

பெல்டா போன்ற சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை எங்கள் பெருந்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதற்கான வரவு செலவுத் திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம். அது ஆண்டுக்கு 4.5 பில்லியன் ரிங்கிட் செலவு பிடிக்கும். அந்தத் தொகை தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 1.8 விழுக்காடு ஆகும்.

நாடற்ற பிரச்னை விவகாரத்தில் இந்தியர்கள் அந்தப் பிரச்னையை எதிர்நோக்குவதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். காரணம் அவர்களால் தங்கள் பிறப்பை உறுதி செய்ய முடியவில்லை. அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அவர்களுடைய பிறப்பை இரண்டு மலேசியக் குடிமக்கள் உறுதி செய்தால் போதும் என நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். நாங்கள் மேலோட்டமான வாக்குறுதிகளை நம்பவில்லை. உறுதியான நடைமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் அன்வார் யோசனைகள் எங்களுடைய பரிந்துரைகளில் ஒரு சிறிய பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை. இரண்டு ஐநா ஒப்பந்தங்கள் -ஒன்று சிவில், அரசியல் உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும், இரண்டாவது இனப் பாகுபாடுகளை ஒழிப்பது பற்றியதாகும்-அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் ஆறாவது யோசனைக்கு எந்தப் பதிலும் இல்லை. தனது ஜனநாயகச் சான்றுகளில் நம்பிக்கை வைத்துள்ள ஒரு கூட்டணி அது விடுபட்டுப் போனது நல்ல சகுனம் அல்ல.

அத்துடன் ஒப்பந்தம் வழி பெருந்திட்டம் அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பதில் இல்லை. அரசாங்கத்தை அமைத்ததும் அந்த ஒப்பந்த விதிகளை அது அமலாக்கும் எனக் கூறும் ஒப்பந்தத்தில் பக்காத்தான் கையெழுத்திட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பக்காத்தானும் பிஎன் -னும் உங்களையும் பெருந்திட்டத்தையும் நிராகரித்தால் என்ன செய்வீர்கள் ?

நாங்கள் பல வழிகளை வைத்துள்ளோம். வாக்குகளை செலுத்த வேண்டாம் என இந்தியர்களுக்கு ஆலோசனை சொல்வது அவற்றுள் ஒன்றாகும். ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்துக்குத் தெரிவு செய்யப்படும். ஆனால் அது வலுவான அரசாங்கமாக இருக்காது. ஆகவே அடுத்த தேர்தலில் ஹிண்ட்ராப்பை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை அது ஏற்படுத்தும்.

ஒரு கட்டத்தில் அவை இந்தியர் வாக்குகளை பெற வேண்டியதின் அவசியத்தை உணரும். அப்போது அவை எங்களுடன் உடன்பாடு செய்து கொள்ளும். சிலாங்கூரைப் பாருங்கள் ஈஜோக் இடைத் தேர்தலில் காலித் இப்ராஹிம் பிஎன் வேட்பாளரிடம் தோல்வி கண்டார். ஆனால் 2008 பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் உருவாக்கிய சுனாமியால் அந்தத் தொகுதியில் உள்ள இந்தியர்கள் அவரை ஆதரித்தார்கள். அவர் வெற்றியும் பெற்றார்.

மும்முனைப் போட்டிகளில் இறங்குமாறு பல ஆதரவாளர்கள் எங்களை வற்புறுத்தி வருகின்றனர். பொருத்தமான நேரத்தில் நாங்கள் அந்த வழியை முடிவு செய்வோம்.

நீங்கள் ஹிண்ட்ராப் பேரணியின் போது அரசியல்வாதிகள் மின்மினிப் பூச்சிகளைப் போன்றவர்கள் எனக் கூறினீர்கள். இப்போது அவர்களுடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?

நான் பேசிய அந்த அனைத்தும் நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.   நாடாளுமன்றம் அரசியல்வாதிகளுடைய ஏக போக உரிமை இல்லை. அது மக்கள் மன்றமாகும். அங்கு எல்லா வகையான மக்களும் பிரதிநிதிக்கப்படுகின்றனர். ஹிண்ட்ராப் அரசியல் கட்சி இல்லை என்றாலும் அரசியல் மாற்றத்தைக்  கொண்டு வரும் இயக்கமாகும். ஆகவே மக்கள் இயக்கமாக நாங்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்ல விரும்புகிறோம். அதனைச் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.

நாங்கள் தகுதி பெற்ற ஆற்றல் மிக்க மக்கள். நாங்கள் பல வழிகளில் எங்கள் கடப்பாடுகளை  மெய்பித்துள்ளோம். எடுத்துக்காட்டுக்கு ஹிண்டராப் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐநாவிலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஐரோப்பிய, பிரிட்டிஷ், ஹாலந்து, பெல்ஜிய நாடாளுமன்றங்களிலும் இந்தியாவிலும் அனைத்துலக அடைக்கல அமைப்பிலும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பிலும் இயக்கங்களை நடத்தியுள்ளோம்.

மலேசியாவில் இந்தியர்கள் மற்றும் இனவாதம் ஆகியவை சம்பந்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக  நாங்கள் பல இயக்கங்களை முன் நின்று நடத்தியுள்ளோம்.

அரசியல்வாதிகள் மின்மினிப் பூச்சிகள் என நான் முன்பு கூறினேன். அவர்கள் மின்னுவர். ஆனால் அவர்களிடமிருந்து நெருப்பு உங்களுக்குக் கிடைக்காது.

மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்ததாக அரசியல்வாதிகளிடம் சாதனைப் பதிவுகள் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் பிரச்னைகளை கையில் எடுக்கின்றனர்.

ஹிண்ட்ராப் எழுப்பிய பல பிரச்னைகள் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ‘மக்கள் சக்தி’ என்றும் ‘ஹிண்ட்ராப் நீடூழி வாழ்க’ என்றும் கோஷமிட்டனர். ஆதாயம் பெற அவர்கள் அதனைச் செய்தார்கள். அரசியல் ஆதாயத்தை அடைய அவர்கள் அந்தப் பிரச்னைகளை கையில் எடுத்தனர்.

ஆனால் அவர்கள் இந்தியர் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்யவே இல்லை. அவர்கள் மின்னுவர். ஆனால் நெருப்பை உற்பத்தி செய்ய மாட்டார்கள். அரசியல்வாதிகள் பற்றிய என்னுடைய கருத்து அது தான்.

நீங்கள் கோரியுள்ள தொகுதிகளுடன் சிறுபான்மை விவகார அமைச்சு ஒன்றை ஹிண்ட்ராப் தலைமையில் அமைக்கும் யோசனை ஏதுமுள்ளதா ?

சிறுபான்மை விவகார அமைச்சு ஒன்றை அமைப்பதும் அதற்கு தலைமை தாங்க நாங்கள் முன் வந்ததும் எங்கள்  யோசனையில் பிரிக்க முடியாத பகுதியாகும். மலேசியாவில் உள்ள ஒரங்கட்டப்பட்ட அனைத்து சிறுபான்மை இனங்களுடைய மேம்பாட்டை கருத்தில் கொண்டு அந்த அமைச்சை அமைக்க வேண்டும் என யோசனை கூறப்பட்டது.

ஒராங் அஸ்லி, சபா, சரவாக் சுதேசிகள் உட்பட மற்ற சிறுபான்மை இனங்களுக்கும் பெருந்திட்டம் சிறப்பான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் காணப்படும் குறைகளைச் சரி செய்வது அந்த ஏற்பாடுகளில் அடங்கும். அதற்குப் போதுமான நிதி வளங்களும் மற்ற ஒதுக்கீடுகளும் அதிகாரமும் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பலவீனங்கள் இருக்கும் போது குறிப்பிட்ட கடினமான பிரச்னைகளை ஒதுக்கீடுகள் தீர்க்கும் என எண்ணுவது தவறாகும்.

பிஎன் அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அதனைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. சிந்தனை மாற்றம் இல்லாவிட்டால் விரும்பப்படும் இலக்கை அடைவது முடியாத காரியம்.

அந்த அமைச்சுக்கான தலைமைத்துவத்தைப் பொறுத்த வரையில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஆற்றலைக் கொண்ட மக்கள் ஹிண்ட்ராப்பிடம் உள்ளனர்.

அம்னோ இனவாத நிர்வாகம் அத்தகைய முயற்சிகளை முறியடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்துப் போராடி திட்டங்களை வெற்றி அடையச் செய்ய துணிச்சலும் ஊக்கமும் தேவை. நாங்கள் ஒரு தவணைக்கு அந்த அமைச்சுக்குத் தலைமை தாங்க விரும்புகிறோம். பின்னர் மற்ற சிறுபான்மை சமூகங்கள் தலைமை தாங்கலாம்.

நீங்கள் பிஎன் -னையும் பக்காத்தானையும் ‘கைப்பாவைகள்’ என வருணித்துள்ளீர்கள். அப்படி இருக்கும் போது ‘பொம்மலாட்டக்காரர்களுடைய’ நலன்களுக்கு சேவை செய்யும் ‘பொம்மைகளில்’ ஒன்றாக உங்களை மாற்றி விடும் நிலை இருக்கும் போது நீங்கள் ஏன் அவற்றுடன் ஒத்துழைப்பை நாடுகின்றீர்கள் ?

நாங்கள் பொம்மைகள் எனச் சொல்லும் போது சுயேச்சையான கொள்கை அதிகாரம் இல்லாத அமைப்புக்களைக் குறிப்பிடுகிறோம். அவை அதிகார வர்க்கத்துக்கு அடிபணிகின்ன. அதிகார வர்க்கத்துக்கு வியூக நலன் ஏதும் இல்லாததால் பெருந்திட்டம் அதனிடம் விடப்பட்டால் அது தொடங்கப்படவே மாட்டாது. ஹிண்ட்ராப் உழைக்கும் இந்தியர்களை பிரதிநிதிக்கிறது. அத்தகைய மக்கள் மீது அதிகார வர்க்கம் கொண்டுள்ள பிடியை தகர்க்க அது போராடும்.

உழைக்கும் வர்க்கத்தின் சில அம்சங்களை பக்கத்தான் தனது கொள்கைகளில் இணைத்துக் கொள்ள பக்காத்தான் விரும்பினால் அது எங்களுடன் பேச வேண்டும். அதனால் தான் போதுமான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள், வளங்கள், அதிகாரம் ஆகியவற்றுடன் தனி அமைச்சை நாங்கள் கோருகிறோம். அதன் மூலம் நாம் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து வெளியில் வர முடியும்.

பிஎன் -னில் இந்தியர் பிரிவுக்கு மஇகா தலைமை தாங்குவது போல பக்காத்தானில் இந்தியர் பிரிவை வழி நடத்த ஹிண்ட்ராப் விரும்புகிறதா ?

நமது முறையில் காணப்படுகின்ற இன ஏற்றத் தாழ்வுகளினால் ஹிண்ட்ராப் உருவானது. பாகுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் பிரதிநிதிக்கிறோம். அந்தப் பாகுபாடு அண்மைய எதிர்காலத்தில் மறையுமா ? ‘இல்லை’ என்பது தான் அதற்குத் தெளிவான பதில். நீண்ட கால அடிப்படையில் அது போகுமா ?

அதற்கான சாத்தியம் உண்டு. ஏனெனில் அத்தகைய மாற்றத்துக்கான இயக்கம் தொடங்கி விட்டது. அதன் வேகம் அதிகரித்து வருகின்றது. நாம் மாற்றத்துக்கான காலத்தில் நாம் இருக்கிறோம். அந்த இடைக்காலத்தில் அரசியல் நடைமுறையில் நமது அனைத்து இன வம்சாவளிகளைச் சேர்ந்த எல்லாப் பிரிவுகளும் நன்கு பிரதிநிதிக்கப்பட வேண்டும்.

ஆம், அந்த இடைக்காலத்தில் பழமைப் போக்குடைய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் சம பங்காளியாக ஏழை இந்தியர்களை நாங்கள் பிரதிநிதிப்பதை நீங்கள் காணலாம். டிஏபியிலும் பிகேஆர் கட்சியிலும் இப்போது காணப்படுகின்ற பல இன உறுப்பியம் அதற்கு மாற்றாக இருக்க முடியாது. ஏனெனில் உண்மையான அதிகாரம் எண்ணிக்கையில் தான் உள்ளது. இந்தியர்கள் ஒவ்வொரு நிலையிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். அதனால் உருப்படியான பிரதிநிதித்துவ அதிகாரம் கிடையாது.

அண்மைய தேர்தல் கொள்கை அறிக்கையில் நாம் அதனைத் தெளிவாக அறிந்து கொண்டோம். நமது முறையில் சம நிலையும் சமூக நீதியும் அடிப்படைப் பண்புகளை நிலை நிறுத்தப்பட்டு இன வம்சாவளி அடிப்படையிலான வழிமுறைகள் ஒழிக்கப்படும் போது ஹிண்ட்ராப் தேவை இல்லை. ஹிண்ட்ராப் மறைந்து விடும்.