சுதந்திர விசாரணையை இலங்கை நடத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்

robert_blakeபோர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன்விசாரணை குறித்து வலியுறுத்துகிறது என்று கூறிய பிளேக் அவர்கள், இந்த விடயத்தில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமென்று தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் அப்படி அது செய்ய விரும்பாவிட்டாலோ அல்லது அதற்கு செய்ய முடியாமல் போனாலோ சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச பொறிமுறையை அங்கு செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே ஒரு சொந்தமான, சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய விசாரணையை தம்மால் நடத்த முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டிய அழுத்தம் இப்போது இலங்கையின் மீது இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் என்பதைவிட அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தை கொண்டுவந்ததில் உள்நோக்கம் இருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பிளேக் அவர்கள், ”இலங்கை தீவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் கொண்டுவருவதுதான் தங்கள் நோக்கம்” என்றும், இலங்கை மக்களுடனான தங்கள் உறவை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதும் அதில் அடங்கும் என்றும், அதனை விட தங்களுக்கு வேறு எந்த விதமான நோக்கமும் தங்களுக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் குறித்து தங்களுக்கு அக்கறை, ஆர்வம் உள்ளது என்றும் ”பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, கடற்போக்குவரத்து பாதுகாப்பு, அதுபோன்ற பல விடயங்கள்” குறித்தும் அந்தப் பிராந்தியத்தில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையை, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம், இந்தத் தீர்மானத்தின் மூலம் பிளவுபடுத்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்க தரப்பினரால் குற்றஞ்சாட்டப்படுவதை பிளேக் மறுத்துள்ளார்.

அமெரிக்காவும் , சர்வதேச சமூகமும் இலங்கையை மீண்டும் ஒன்றுபடுத்த விளைவதாகவே தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: