இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபத் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 தொடக்கம் 17ம் நாள் வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை காமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, மொரிசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஸ்டீபன் ஹாப்பர் அரசாங்கம், காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று உறுதியான முடிவை எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு கரிபியன் நாடுகளுக்கு கனடா அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.