முடிவு கட்டுங்கள் : ஜோகூர் வாக்காளர்களுக்கு மகாதீர் வேண்டுகோள்

maha13வது பொதுத் தேர்தல் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதை  உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜோகூரில் உள்ள பல்வேறு சமூகங்களைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் Parti Keadilan Rakyat என்ற பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம், பாஸ்  ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆகியோரது அரசியல் வாழ்க்கையையும் விரைவில்  நிகழவிருக்கும் 13வது பொதுத் தேர்தலில் வாக்குப் பெட்டி மூலம் மலேசிய மக்கள் முடிவுக்குக் கொண்டு வர  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“லிம் கிட் சியாங் போட்டியிட இங்கு வர விரும்புகிறார். லிம் கிட் சியாங்-கின் அரசியலுக்குப் ‘புதைகுழியாக’ ஜோகூர் மாநிலம் இருப்பதை உறுதி செய்ய தங்களை ஆற்றலை ஒன்று திரட்டுமாறு ஜோகூரில் உள்ள எல்லா மக்களையும் எல்லா சமூகங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.”

“ஜோகூரில் அவர் (கிட் சியாங்) தோல்வி காண்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அந்த மாநிலம்  பிஎன் -னுக்கு (பாரிசான் நேசனல்) தொடர்ந்து நிரந்தர வைப்புத் தொகையாக இருக்க வேண்டும்,” என மகாதீர் சொன்னார்.

அவர் பிஎன் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி சேவை மய்யம் நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த ‘Bicara Minda’ நிகழ்ச்சியில் பேசினார். அதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

maha1பிஎன் கோட்டையான ஜோகூர் மாநிலத்தில் பக்காத்தான் ராக்யாட் ஊடுருவுவதற்கு உதவும் பொருட்டு  அங்குள்ள கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்மையில் லிம் கிட்  சியாங் அறிவித்தார்.

அன்வாரும் நிராகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட மகாதீர் அந்த பிகேஆர் தலைவருடைய ஒரே நோக்கம் பிரதமராவதாகும் என்றார். அதனை அடைவதற்கு அவர் எதனையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

13வது பொதுத் தேர்தலில் தாம் தோல்வி காணப் போவதை அன்வார் அறிந்துள்ளதால் குழப்பத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்த அவர் தயார் செய்து வருவதாகவும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

நிக் அப்துல் அஜிஸைப் பொறுத்த வரையில் அந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்றார் மகாதீர்.

ஜோகூரில் பாஸ் கட்சிக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்பதால் அது அந்த மாநிலத்துக்குள் ஊடுருவுவதற்கு  முயற்சி செய்யக்கூடாது என்றும் அதற்குப் பதில் அந்தக் கட்சி கிளந்தானில் கவனம் செலுத்த வேண்டும்  என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

-பெர்னாமா