மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின

myanmarnewspaperயாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே நாளிதழ்களை நடத்தி வந்தது. நூற்றுக்கணக்கான வார இதழ்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு, சுகாதாரம் போன்றவற்றை மையமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயக நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏஎஃபி செய்தி நிறுவனம் தமது கிளையை யாங்கூனில் அமைத்தது. இதன் பின்னர் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் தனியார் நாளிதழ்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று நாளிதழ்கள் வெளியாகியிருக்கின்றன. 1960-களுக்குப் பின் பிறந்தவர்களுக்கு தனியார் நாளிதழ்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தால் அவை விறுவிறுவென விற்றுத் தீர்ந்திருக்கின்றன.