“மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்”

mri_brainஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன் மூலம் ஒருவர் எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடிய வாய்ப்பு பற்றி புரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றன.

மூளையின் மேற்பரப்பில் அண்ட்டீரியர் சிங்குலேட் கார்ட்டெக்ஸ் என்ற பகுதி நமது நடத்தை, நமது உணர்வுப் பெருக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றுகிறது.

குற்றங்களைச் செய்தவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியவர்களது மூளையில் அண்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் என்ற குறிப்பிட்ட இந்த பாகத்தில் செயற்பாடுகள் குறைவாக இருந்தால் அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எதிர்காலத்தில் குற்றவியல் நீதிக் கட்டமைப்பு செயல்படும் விதம், குற்றவாளிகள் கையாளப்படும் விதம் போன்றவற்றில் இந்த ஆய்வின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் மொபைல் இமேஜிங் பிரிவின் இயக்குநராகவும் நியூமெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் இருக்கும் கெண்ட் கியெல் கூறுகிறார்.

மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்புள்ளவர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு, அவர்கள் திருந்துவதற்கு உதவும் உளநலப் பயிற்சிகளை வடிவமைக்க முடியும் என்று பேராசிரியல் கியெல் கூறுகிறார்.

சட்டென முடிவெடுக்கும்படியான கணினி விளையாடுகளை சிறைக் கைதிகளை விளையாட வைத்து, அந்த நேரத்தில் அவர்களது மூளைச் செயல்பாடுகளை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து ஆராய்ந்து இந்த பரிசோதனையை ஆய்வாளர்கள் நடத்தியிருந்தனர்.