பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் புதிய வீடியோ ஒன்று வலம்வந்துகொண்டிருப்பதைக் கண்டித்த அக்கட்சி அது, 2012 பட்ஜெட்டில் உள்ள பலவீனங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சி என்று வருணித்துள்ளது.
“ஜோடிக்கப்பட்ட வீடியோக்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதன்வழியும் இடமளிப்பதன்வழியும்” அரசு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2012 பட்ஜெட்டைத் தற்காக்க பிரதமர் அப்துல் ரசாக்கும் அவரது அரசும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்குக் நேரத்தில் இந்தப் புதிய வீடியோ வலம்வருவது தற்செயலாக நிகழ்ந்ததல்ல”, என்றாரவர்.
நேற்று அம்னோ-ஆதரவு வலைப்பதிவுகளில் பதிவிடப்பட்டிருந்த இந்த வீடியோ தங்குவிடுதி அறையொன்றில் அன்வார் சல்லாபத்தில் ஈடுபட தயாராவதைக் காண்பித்தது.இது தாய்லாந்து பெங்கோக்கில் பாலியல் விவகாரங்களுக்குப் பெயர்பெற்ற பாட்போங் வட்டாரத்தில் பதிவு செய்யப்பட்டது என்று வலைப்பதிவர் பாபா கோமோ கூறிக்கொள்கிறார்.
டத்தோ டி என்று தங்களை அழைத்துக்கொண்ட மூவரடங்கிய கும்பல் இதைவிட தெளிவான வீடியோவை வெளியிட்டு சில மாதங்களே ஆகியுள்ள வேளையில் புதிதாக வலம்வந்துகொண்டிருக்கும் இந்த வீடியோ, “அம்னோ-பிஎன்னின் சதித்திட்டத்துக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருப்பதாக” சுரேந்திரன் கூறினார்.
“பாலியலை மையமாகக் கொண்டு அசிங்கப்படுத்தும் இந்த அரசியல் மகாதிர் ஆட்சியில் அம்னோ-பின்னால் தொடக்கி வைக்கப்பட்டது.அப்போது துணப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் மீது நம்பமுடியாத பாலியல் குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்ட அரசுவளம் வாரி இறைக்கப்பட்டது.
“அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அம்னோ-பிஎன் அதன் பொருளாதார நிர்வாகச் சீர்கேடுகளையும் ஊழல்களையும் மூடிமறைக்க செக்ஸ் வீடியோக்களுக்கு மறைமுகமாகமாக ஆதரவளித்து வருகிறது.”
இப்படிப்பட்ட சாக்கடை அரசியலில் இறங்குவதை விடுத்து “நல்லவைபோல் தோற்றமளிக்கும் பொறுப்பற்ற” பட்ஜெட் பரிந்துரைகளை மீட்டுக்கொண்டு அவற்றைத் திருத்தும் முயற்சியில் பிஎன் ஈடுபட வேண்டும் என்று சுரேந்திரன் கூறினார்.