இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திருக்கும் மூன்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முறையான ஆவணங்களில்லாது இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயராஜ் (26), வசந்த்குமார் (24) மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த பிரசாத் (19) ஆகிய மூவர் இன்று செவ்வாய் அதிகாலையில் தனுஷ்கோடி அருகே தனியார் படகுகளில் இறக்கிவிடப்பட்டு, பின்னர் ராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் கடந்த சில நாட்களாகவே வடபகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மீண்டும் துவங்கிவிட்டதாகவும் தெருக்களில் நடமாடவே தமிழிளைஞர்கள் அச்சப்படுவதாகவும், இனியும் அங்கிருப்பது ஆபத்தென்பதால் தம் குடும்பத்தினர் கூறிய ஆலோசனையில்பேரில் இந்தியா வந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.
அவர்களிடம் சந்தேகப்படும்படியான எப்பொருளும் இல்லை, அவர்கள் கூறுவதும் உண்மை போலவே தெரிகிறதென்றாலும், முறையான ஆவணங்களின்றி இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து நீதவான் முன் ஆஜர்படுத்தியதாக உயர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் பின்புலம் குறித்து சரிவர அறிந்த பின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவார்களா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்யும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.