ஏழை இந்தியர்களுடைய இன்னல்களை விவாதிக்க வருமாறு கிட் சியாங்-கிற்கு ஹிண்ட்ராப் சவால்

indians2ஹிண்ட்ராப்-பின் ஐந்து ஆண்டுப் பெருந்திட்டத்தை டிஏபி ‘திருடி’ விட்டதாக கூறிக் கொள்ளும் அந்த  அமைப்பு, விவாதம் நடத்த வருமாறு டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சவால்  விடுத்துள்ளது.

இந்திய சமூகத்துக்கான டிஏபி-யின் கேலாங் பாத்தா பிரகடனத்தின் உள்ளடக்கத்தை வாசித்த பின்னர், அது ஹிண்ட்ராப்பின் பெருந் திட்டத்திலிருந்து ‘திருடப்பட்டது’ என்பது தெளிவாகிறது என அதன் தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.

“அந்தப் பெருந்திட்டத்தை தயாரிக்க நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பார்க்கும் போது 24 மணி நேரத்துக்குள் கடுமையான ஒர் ஆவணத்தை எப்படித் தயாரிக்க முடியும் என்பது எங்களுக்குப் புரியவில்லை.”

“கேலாங் பாத்தா பிரகடனத்தில் பெரும்பகுதி ஹிண்ட்ராப் பெருந்திட்டத்திலிருந்து வருவதால் டிஏபி ஏன் எங்களுடைய பெருந்திட்டத்தை முதலில் ஏன் அங்கீகரிக்கவில்லை அல்லது அது குறித்து பேச்சு நடத்த முன் வரவில்லை என்பதும் எங்களுக்குப் புரியவில்லை ?” என்றார் கணேசன்.

indiansஆகவே அது அந்த ஆவணத்தை வெளியிட்ட டிஏபி-யின் உண்மை நிலை குறித்து கேள்வி எழுப்புகிறது என்றும் அவர் சொன்னார்.

“இது போன்ற அரசியல் சந்தர்ப்பவாதங்கள், ஏழை இந்தியர்களை பெரிய அளவில் ஏமாற்றப்படப் போகின்றனர்  என்பதைக் காட்டுவதாக நாங்கள் கருதுகிறோம்.”

இனிமேலும் ஒதுங்கியிருந்து கவனிக்க முடியாது

“ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளைப் பெற்று பின்னர் அவர்களுக்கு சுண்டைக் கடலையை வீசுவதற்கான முயற்சியை நாங்கள் இனிமேலும் ஒதுங்கியிருந்து கவனிக்க முடியாது,” என்றார் அவர்.

“ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி தமது உண்ணாவிரதத்தை கைவிட்டு பெருந்திட்டம் மீது இணக்கமான  தீர்வு காண எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பேச்சுக்களைத் தொடங்குமாறு டிஏபி தேசியத்  தலைவர் மார்ச் 30ம் தேதி கேட்டுக் கொண்டார். ஆனால் அடுத்து லிம் அந்தப் பிரகடனத்தை அறிவிக்கிறார்.”

“இது எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது. அந்த முழு அத்தியாயத்திலும் தீவிரம் காட்டப்படுகிறதா என்ற  சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது,” என கணேசன் மேலும் கூறினார்.

எனவே அது குறித்த சந்தேகங்களைப் போக்குவதற்கு மக்கள் முன்னிலையில் விவாதம் நடத்த வருமாறு ஹிண்டராப் சார்பில் அவர் சவால் விடுத்தார்.

“இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு டிஏபி பிரகடனம் உண்மையான திட்டமல்ல” என்னும் தலைப்பில் நாங்கள் பேசுவோம்,” என கணேசன் சொன்னார்.

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கம் கொண்ட 14 அம்சத் திட்டத்தை மார்ச் 31ல் டிஏபி அறிவித்தது.