இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அந்தச் சம்பவத்தில் கைதான 14 பேரும், கடையின் உரிமையாளர் தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது விசனத்துரியது என்பது மட்டுமல்லால் அதன் பின்னணியில் சந்தேகங்கள் இருக்கின்றன எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கைகள் மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை போக்க வழி செய்துவிடும் எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் காவி உடை தரித்தால் எதையுமே செய்து விடலாம் என்கிற ஒரு அசிங்கமான கலாச்சாரம் இருந்து வருகிறது எனவும் கூறும் அவர், அது கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குற்றம் செய்தவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்வதற்கான ஒரு இடமாக இலங்கை கணிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை இழக்க வேண்டிய ஆபத்தும் வரலாம் எனவும் நாட்டின் நீதியமைச்சரான ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை(5.4.13) ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு ஒன்று இடம்பெறுகிறது என்றும், அதில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-BBC