சுயநலத்துக்காக, ஆசிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது,” என, சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஆசிய பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு, பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர், சச்சின் பைலட், அமெரிக்க தொழிலதிபர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:
கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புவதாக அமெரிக்கா கூறுகிறது. சுய நல நோக்கோடு, ஆசிய பகுதியில் குழப்பம் விளைவிக்க, யாரையும் அனுமதிக்க முடியாது. ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் இந்த நடைமுறையை ஏற்க முடியாது.
சீனாவுக்கு, அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னை தொடர்பாக முரண்பாடு இருந்தாலும், அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஏழை நாடாக இருந்தாலும், பணக்கார நாடாக இருந்தாலும், சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும், அமைதி ஏற்படுத்துவதில் இந்த நாடுகளின் பங்களிப்பு தேவை.காற்று, வெயில் உள்ளிட்டவை இயல்பாக எங்கும் நிறைந்திருப்பது. அதன் பலனை எல்லாரும் அனுபவிக்க முடியும். அதே போல, அமைதியும் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு ஜின்பிங் பேசினார்.
ஜப்பான் உஷார்: தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு, இம்மாதம், 10ம் தேதி முதல், பாதுகாப்பளிக்க முடியாது என, வட கொரியா தெரிவித்திருந்தது.எனவே, “வட கொரியா தாக்குதல் நடத்தும்’ என, அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் போன்றவை நம்புகின்றன.”நம் நாட்டு எல்லைக்குள் நுழையும் வட கொரிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துங்கள்’ என, ஜப்பான் தனது ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுவதால், தாங்கள் மேற்கொள்ளும் ஏவுகணை சோதனை, தேவையில்லாத சந்தேகங்களை உருவாக்கும் என்பதால், இந்த சோதனையை நிறுத்தி வைத்துள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேஜல் தெரிவித்துள்ளார்.