‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’

sambanthar_tnaஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும், வெறுப் பூட்டும் நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் பாரபட்சமாக நடப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசமைப்புச்சட்டத்தின்படி அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் தாக்கப்படும்போது தமிழர்கள் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது :

முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருபவர்கள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக மிகப்பெரும் பங்களிப்பை பல நூற்றாண்டுகளாக செய்துவந்துள்ளார்கள். அவர்கள் தங்களுக்கென தனித்துவமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள், உணவு மற்றும் உடைகளை கொண்டுள்ளார்கள் மற்றும் தங்கள் மதத்தின் மீது தெய்வ நம்பிக்கை கொண்ட பற்றாளர்கள். 8ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை பரவியிருந்த இஸ்லாமிய பொற்காலத்தின் பண்பாடு சார்ந்த கொடையாளர்களாகிய இலங்கை முஸ்லிம் மக்கள் கலை மற்றும் இசை,மருத்துவம் மற்றும் சட்டம் மற்றும் விஞ்ஞானம், தொழில் முயற்சி கல்வி அறிவு மற்றும் இன்னோரன்ன துறைகளின் வளர்ச்சியில் உயர்நிலைளை அடைந்துள்ளார்கள்.

எவ்வாறாயினும் இன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த கசப்பான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்துள்ள கும்பல்களின் பல்வகையான வன்செயல்கள் பற்றி நான் மீண்டும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. பட்டப்பகலில் முன்பின் தெரியாதவர்களால் பழமை தழுவிய மத உடைகளை அணிந்த முஸ்லிம் பெண்கள் கெட்ட நோக்கத்துடன் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் அவமரியாதையான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மக்கள் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் மற்றும் பதற்றம் ஆகியன குறித்து வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ் மக்களினதும் முஸ்லிம்மக்களினதும் உறவு எப்போதும் மிகவும் நெருக்கமானதாக இருந்து வந்துள்ளது. சில சமயம் உறவு மிகவும் அரிதானக இருப்பினும் வன்செயல் மற்றும் குரூரத்தனம் காரணமாக வெட்கப்படக்கூடியதாக இருந்தது. என்றாலும் இரு தரப்பு உறவு மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகின்றது. மற்றவரின் விதியில் உயிர்பிழைக்கலாம் என்ற அடிப்படையில் எம் மக்கள் உறவு பின்னிப்பிணைந்துள்ளது.

சிங்களவர்கள், மலாய் மற்றும் பறங்கியர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்திருப்பது போன்றே நாம் முஸ்லிம்மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளோம். பொது மொழி மற்றும் வாழ்விடம் ஆகியற்றின் இணைப்பை இலகுவாக துண்டிக்க முடியாது. ஆகவே எமது முஸ்லிம் சகோதரர்கள்,சகோதரிகள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால், அல்லது குண்டர்களால் தாக்கப்பட்டால் அல்லது அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் நாம் அக்கறையற்ற பார்வையாளர்களாக இருக்கமுடியாது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தினமும் நாம் கேட்கும் வெறுப்பூட்டுகின்ற அவதூறுப் பேச்சுக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இந்த அவதூறுப் பிரசாரத்துக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலோர் இவ்வாறான அவதூறு நடவடிக்கைகளை மன்னிக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். அவர்கள் மற்றவர்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து சமாதானமாகவும் இன ஒற்றுமையுடனும் வாழ்வதற்கே விரும்புகின்றார்கள்.

மிகமோசமான கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாம் இந்த நாடும் உலகமும் பொறுப்புக்கூறும் தன்மை நீதி, உண்மையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும்
அநீதி இடம்பெறாது என்ற உத்தரவாதம் தரவேண்டும் என்று கோருகின்றோம்.

சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் .இது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என்பதை நாம் அழுத்திக்கூற விரும்புகின்றோம். அண்மைக்கால சம்பவங்கள் அரசாங்கம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்பதை உணர்த்துகின்றன.

பாரபட்சமாக நடந்து கொள்வதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன், முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களையும் சமமான பாதுகாப்பை வழங்குவதற்கு
அரசமைப்புச்சட்டத்தின்படி உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்று சம்பந்தர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: