1982-க்குப் பின்னர் பரப்புரைக்கென்று நீண்ட காலம் -15 நாள்கள்- இப்போதுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது போதுமானதல்ல என்கிறார் பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்.
“15 நாள்கள்தான் என்பதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. பெர்சே-இன் கோரிக்கைக்கு ஏற்ப 21 நாள்களாவது ஒதுக்கப்படும் என்றிருந்தோம்”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் எதிரணிக்கோ பினாங்கு மாநில அரசுக்கோ நியாயமான அளவு நேரத்தை ஒதுக்கியதில்லை. அதனால்தான் (பரப்புரைக்கு) கூடுதல் நாள்கள் தேவை என்று நினைக்கிறோம்.
“தேர்தல் ஆணையம் (இசி) 2008-இல் கொடுத்ததைவிட இரண்டு நாள்கள் கூடுதலாகவே கொடுத்துள்ளது. ஆனாலும், அது போதாது”.
இசி, ஏப்ரல் 20ம் தேதியை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாகவும் மே 5ம் தேதியை வாக்களிப்பு நாளாகவும் இன்று அறிவித்தது.
டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், அரசியல் கட்சிகளின் தேர்தல் கொள்கை உரையை ஒலிபரப்ப தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு 10 நிமிட நேரம் மட்டுமே ஒதுக்கியதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துக்கொண்டார்.
அது “தேர்தலையும் ஜனநாயக நடைமுறையையும் அவமதிக்கும் செயல்” என்று சாடிய அவர் “ஊடகச் சுதந்திரம் என்பது எப்போதும் இருக்க வேண்டிய ஒன்று. 10 நிமிடத்துக்கு மட்டும் அல்ல”, என்றார்.
மே 5 ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகியவற்றில் அது ஒரு வேலை நாள் என்பதால் அதைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.