நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீறியுள்ளதாகக் கூறப்படும் பல பராமரிப்பு அரசாங்க விதிமுறைகளை பெர்சே பட்டியலிட்டுள்ளது.
அவற்றுள் : -நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 4ம் தேதி மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மாநில அரசு ஊழியர்களுக்கு 300 ரிங்கிட் போனஸ் வழங்கியது
-ஏப்ரல் 5ம் தேதி குடியிருப்புப் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2.46 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்கியது
-பெஸ்தாரி ஜெயாவில் உள்ள கிராமமக்களுக்கு நில உரிமைப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டன. அதற்கான பிரிமியம் தொகையைச் செலுத்த இயலாதவர்களுக்கு உதவி செய்ய மந்திரி புசார் காலித் இப்ராஹிம் முன் வந்தது ஆகியவையும் அடங்கும்.
அந்த நடவடிக்கைகள் வாக்குகளை வாங்குவதற்குச் சமமாகும் என பெர்சே அமைப்பின் தேர்தல் மீறல் கண்காணிப்புக் குழுவின் இணைத் தலைவர் ஐரின் பெர்னாண்டெஸ் கூறினார்.
13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுடைய எல்லா அத்துமீறல்களையும் சுட்டிக் காட்டி அவற்றை ‘பெயர் குறிப்பிட்டு அவமானப்படுத்தும்’ பட்டியலில் சேர்த்து பொது மக்களுக்கு அறிவிக்கப் போவதாக பெர்சே வாக்குறுதி அளித்துள்ளது.
கூட்டரசு அரசாங்கமும் இது போன்று ‘வாக்குகளை வாங்கும்’ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தக் குழு குற்றம் சாட்டியுள்ளது.