டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக தமது வலைப்பதிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை, கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதற்குச் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு ‘வாய்ப்பு’ கொடுக்கப்பட வேண்டும் என லிம் கிட் சியாங் கூறுகிறார்.
ஏப்ரல் 11ம் தேதி தமது வலைப்பதிவில் மகாதீர் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவருக்கு எதிராக டிஏபி சிகாம்புட் எம்பி லிம் லிப் எங் போலீசில் புகார் செய்துள்ளதாக இன்று விடுத்த ஒர் அறிக்கையில் லிம் தெரிவித்துள்ளார்.
கேலாங் பாத்தாவில் லிம் வெற்றி பெற்றால் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் இனப் பகைமை ஏற்படும் என அந்த வலைப்பதிவில் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதால் மகாதீர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு தமது வழக்குரைஞருக்கு உத்தரவிடும் முன்னர் மகாதீர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத் துறைத் தலைவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க விரும்புவதாக அவர் சொன்னார்.
“மகாதீருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு என் வழக்குரைருக்கு உத்தரவிடும் முன்னர் தேச நிந்தனை, கிரிமினல் அவதூறுக்காக மகாதீரைக் கைது செய்து குற்றம் சாட்ட நான் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்,” என லிம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்புணர்வைக் கொண்ட தேச நிந்தனையான தமது வலைப்பதிவில் தமது தோற்றத்தின் மீது ஆதாரமற்ற , பொறுப்பற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது மீது இரண்டு முறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் லிம் சொன்னார்.
ஆனால் மகாதீர் ‘திருந்துவமில்லை, நகரவும் இல்லை,” என்றார் அவர்.