இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.
எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.
ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது.
எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரமும், தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ள அந்த பகுதிக்கு 20 தேடுதல் மற்றும் மீடுபுக் குழுக்களை தாம் அனுப்பியுள்ளதாக இரானிய செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது.
அந்தப் பகுதியில் பெரும்பாலும் மண் வீடுகளே இருக்கும் நிலையில் அவை இடிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம், அதற்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பல மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
-BBC