உதயா: வேதா புதிய சாமிவேலு-வாக விரும்புகிறார்

uthayaகோத்தா ராஜா தொகுதியில் பி உதயமுமார் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலுவலகத்துக்கு  வெளியில் ஹிண்ட்ராப்பின் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற கருபொருளுடன் அவரது முகமும் ‘பி உதயகுமார்  1990 முதல் ஒரு நபர் காட்சி’ என பொறிக்கப்பட்டுள்ளன.

ஹிண்ட்ராப் பெருந்திட்டம் மீது பக்காத்தான் ராக்யாட், பிஎன் ஆகியவற்றுடன் தமது சகோதரர் பி வேதமூர்த்தி பேச்சு நடத்துவது மீது ஹிண்ட்ராப் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான உதயகுமார் பல மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார்.

ஆனால் தமது இளைய சகோதரர் பிஎன் -உடன் உடன்பாடு செய்து கொண்டு அதற்கு ஆதரவளிக்குமாறும்
ஏன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெருமபான்மை கிடைக்குமாறும் கேட்டுக் கொண்டது
உதயகுமாருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.

“வேதா அடுத்த சாமிவேலு-வாக (முன்னாள் மஇகா தலைவர்) விரும்புகிறார். அவர்தான் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவையில் அமைச்சர் பதவிக்கு (குறி) வைத்துள்ள புதிய ‘மண்டோர்’ (அதிகாரம் இல்லாத தூதுவன்),”
என அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

uthaya1தமது இளைய சகோதரர் பிஎன் உடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவார் எனத் தாம் எதிர்பார்க்கவே இல்லை என உதயகுமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“பக்காத்தானிடமிருந்து நல்ல பேரத்தைப் பெறுவதற்கு அவர் பிஎன்-னை பகடைக்காயாகப்  பயன்படுத்துவதாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.”

ஹிண்ட்ராப் தோற்றுவிக்கப்பட்டதற்கு முக்கியமான மூளை எனக் கருதப்படும் உதயகுமார், அந்த அமைப்பை  வேதமூர்த்தி கொண்டு செல்லும் பாதையை ஒப்புக் கொள்ளவில்லை என்பது தெளிவாகும்.

“எங்களுக்கு இடையில் பிரச்னை ஏதும் உள்ளதா என என்னிடம் பலர் கேட்டனர். ஏதுவுமில்லை என நான் கூறினேன்.”

“நான் அவருடன் மோத விரும்பவில்லை. அவ்வாறு செய்தால் வதந்திகள் உருவாகி விடும். சகோதரர்கள் பதவிகளுக்குச் சண்டையிட்டுக் கொள்வதாக மக்கள் சொல்வார்கள்.”

“ஆனால் இது (பிஎன் ஒப்பந்தம்) துரோகமாகும். இதனை மன்னிக்கவே முடியாது,” என அவர் உறுதியாகச் சொன்னார்.

“வேதாவும் ‘ஜால்ரா’ வாகனத்தில் இணைந்து விட்டார்”

uthaya2வேதமூர்த்தி பிஎன் -னுக்கு வாக்குகளைக் கொண்டு வர இயலாது என உதயகுமார் உறுதியாக நம்புகிறார்.  பிஎன் -உடன் ஹிண்ட்ராப் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் பலர் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு ஆத்திரத்தைக் கொட்டியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“இது வரை நான் சாலையில் நடந்து செல்லும் போது யாரும் என்னைத் திட்டியதுமில்லை. சாபம் போட்டதும்  இல்லை. சேவியர் ஜெயகுமார் பற்றி நான் வினவிய போது வணிகர் ஒருவர் அவரை ஏசியதை நான் கேட்டேன்.  விரைவில் தாம் செய்த காரியத்துக்காக வேதமூர்த்தியும் கண்டனத்திற்கு இலக்காவார்,” என்றார் அவர்.

2007ம் ஆண்டு நவம்பர் 27 ஹிண்டராப் பேரணிக்குப் பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஐவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதிலும் சிலர் சொல்வது போல ஹிண்ட்ராப்-புக்கு ஒரு போதும் ஐந்து முக்கியத் தலைவர்கள் இருந்ததில்லை என உதயகுமார் வலியுறுத்தினார்.

“நான் ஹிண்ட்ராப்புக்கு தலைமை தாங்கினேன். அதற்கு இரண்டாம் நிலை தலைமைத்துவம் என எதுவும் இருந்தது இல்லை. என்னுடன் ஒரு குமாஸ்தா இருந்தார். அடுத்து மக்கள் தான்.”

“நாம் எழுப்பும் பிரச்னைகளுக்கு நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக வழக்குரைஞர் குழு
(வேதமூர்த்தி உட்பட) ஒன்றை அமைக்க நான் முடிவு செய்தேன்,” என உதயகுமார் மேலும் சொன்னார்.

“அவர்கள் அனைவரும் இயக்கத்தின் உச்சக்கட்டமாக அமைந்த பேரணிக்கு சில மாதங்கள் முன்னதாகத்தான்
இணைந்தனர்.”

“அதற்கு முன்னதாக நான் 16 ஆண்டுகள் அதற்காக நான் போராடி வந்தேன். ஐவர் ஜெயிலுக்குச் சென்றதால்
ஐந்து தலைவர்கள் இருப்பதாக ஒவ்வொருவரும் எண்ணினர்.”

“நான் அதற்கு முன்னரே ஹிண்ட்ராப்பை நடத்தி வந்தேன்,” என அவர் குறிப்பிட்டார்.

“நான் ஜெயிலில் இருந்த போது வேதமூர்த்தி ஹிண்ட்ராப் அலையில் சவாரி செய்து தலைமைத்துவத்தை ஏற்றுக்  கொண்டார். தமக்கு பலன் கிடைப்பதற்கு அவர் ஹிண்ட்ராப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.”

‘ஹிண்ட்ராப்பை உடைப்பதில் பிஎன் வெற்றி கண்டுள்ளது’

ஹிண்ட்ராப் தரப்புக்களுக்குள் இப்போது காணப்படும் வேறுபாடுகள் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளதற்கான  அறிகுறி என உதயகுமார் கருதுகிறார்.

“அரசாங்கம் வெற்றி பெற்றது. நான் தோல்வி கண்டேன். அவர்கள் இயக்கத்தைப் பிரித்து விட்டார்கள்,” என  உதயமூர்த்தி சொன்னார்.

“நான் 514 நாட்கள் இசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தது எதற்காக ? அந்த இயக்கம் இது போன்று  கடத்தப்பட்டு பிஎன்-னிடம் சரணடைவதற்கா?

பல்வேறு தரப்புக்கள் அடித்தட்டு உறுப்பினர்களிடையே ‘உண்மையான குழப்பத்தை’ ஏற்படுத்தி விட்டதை அவர் ஒப்புக் கொண்டார். என்றாலும் ஆர்எஸ் தனேந்திரனிடமிருந்து வேதமூர்த்தி வேறுபட்டவர் அல்ல என அவர் கருதுகிறார்.

முன்னாள் ஹிண்ட்ராப் போராளியான தனேந்திரன் இயக்கத்தை பின்னுக்கு தள்ளி விட்டு பிஎன் -னுக்கு
நட்புறவான மக்கள் சக்தி கட்சியைத் தோற்றுவித்தார்.

“தனேந்திரனைப் பற்றி மக்கள் அறிந்தது நிகழ்ந்ததைப் போல அதுவும் நசித்துப் போகும். ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அந்தத் தெளிவு கிடைத்து விடுமா என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.”

“அது நடந்தால் அது எனக்கு நல்லது,” என கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் நிகழும் 15 நாள் பிரச்சார காலத்தைப் பற்றிக் குறிப்பிட்டு உதயகுமார் பேசினார்

அந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் முதலாவது ‘ஹிண்ட்ராப்’ எம்பி என்ற பெருமை அவருக்குக்
கிடைக்கும்.

105,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கோத்தா ராஜா தொகுதியில் உதயகுமார், அதன் நடப்பு எம்பி மரியா மாஹ்முட், எஸ் முருகேசன் (மஇகா), அஸ்மான் இட்ருஸ் (சுயேச்சை) ஆகியோருடன் மோதுகிறார்.

சிலாங்கூரில் உள்ள கோத்தா ராஜா தொகுதி அதிகமான இந்திய வாக்காளர்களை (29 விழுக்காடு) கொண்ட
தொகுதியாகும். அந்தத் தொகுதியின் கீழ் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஸ்ரீ
அண்டாலாஸிலும் உதயகுமார் ஒரு வேட்பாளர் ஆவார். அங்கு ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது.