அணு ஆயுதத் தடையை மீறிய வடகொரியா, ஈரான்: ஐ.நா கவலை

northkorea_iranஐ.நா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான P5 நாடுகள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வை 2015ம் ஆண்டில் நடத்துவதற்காக ஜெனீவாவில் இரண்டு நாள் ஆயத்தக் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அணுசக்தி மையம்(IAEA) இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 1970ம் ஆண்டில் உருவான அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்குப் பின்னர் உலகநாடுகள் அணுசக்தி சோதனை நடத்துவதும், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் தடுக்கப்பட்டது.

ஆனால் வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுகின்றன என்று P5 நாடுகள் கவலை தெரிவித்தது. வடகொரியா கடந்த 2003ம் ஆண்டில் இந்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டது.

மேலும் ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் தனது நாட்டின் மின்சாரத் தேவைக்காகவும், மருத்துவத் தேவைக்காகவும் அணுசக்தி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த வாரம் நடந்த ஐ.நா பாதுகாப்பு குழுவின் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு ரஷ்யா தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.