பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதால் அதற்கு முஸ்லிம் அல்லாதார் வாக்களிக்கக் கூடாது என தாம் விடுத்த அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்ணாண்டஸ் மீட்டுக் கொண்டிருக்கிறார்.
அடுத்து அவர் அந்த இஸ்லாமியக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
பக்காத்தான் ராக்யாட் திட்டத்தில் ஹுடுட் ஒரு பகுதி அல்ல என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்-கும் கூட்டறிக்கை விடுத்த பின்னர் தாம் அந்த முடிவைச் செய்ததாக நோர்மன் இன்று ஜோகூர் பாருவில் நிருபர்களிடம் கூறினார்.
“ஆகவே பாஸ் கட்சியை ஆதரிக்க வேண்டாம் என நான் முன்பு விடுத்த அறிக்கையை வெளிப்படையாகவும் உண்மையாகவும் நான் இப்போது மீட்டுக் கொள்வது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்.”
அழுத்தம் கொடுக்கப்பட்டதாலோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாலோ தாம் அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ளவில்லை என்றும் வழக்குரைஞருமான நோர்மான் வலியுறுத்தினார்.
நிருபர்கள் சந்திப்பின் போது பாஸ் உதவித் தலைவர் சலாஹுடிப் அயூப், மாநில பாஸ் துணை ஆணையாளர் மஸ்லான் அலிமான். மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.