பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது!

pkrதேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும் தலா 110  நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும் என உள்வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி பக்காத்தான் ராக்யாட் தெரிவித்துள்ளது.

“பிஎன் வாக்குகளை வாங்கும் இறுதிக் கட்டத்தில் இறங்கியுள்ளதுடன் அந்நியத் தொழிலாளர்களையும் அமர்த்தியுள்ளதுடன் அழியக் கூடிய மையையும் பயன்படுத்துகின்றது,” என டிஏபி அரசியல் கல்விப் பிரிவுத் தலைவர் லியூ சின் தொங் கூறினார்.

பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு சபா, சரவாக் மாநிலங்கள் முக்கியமானவை எனக் கருதப்படுவதால் தங்கள் வாக்குகளை செலுத்த அந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லுமாறு வாக்காளர்களை  அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக சிபு நாடாளுமன்றத் தொகுதியில் நிலைமை கடுமையாக இருப்பதாகவும் வாக்களித்தவர் விகிதம் அங்கு 75 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் வரும் தேர்தலில் டிஏபி அதனை இழக்கக் கூடும் என்றும் லியூ சொன்னார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் வேளையில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்குத் திரும்புமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கினார்.

வாக்களித்தவர் விகிதத்தை உயர்த்துவது எளிதான காரியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், 2008-லும் 2010 இடைத்தேர்தலிலும் அங்கு 68 விழுக்காட்டுக்கும் 70 விழுக்காட்டுக்கும் இடையிலான வாக்காளர்களே வாக்களித்ததாக லியூ தெரிவித்தார்.

2008ம் ஆண்டு இருந்ததுடன் ஒப்பிடுகையில் பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு இரண்டு விழுக்காடு கூடி 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் சொன்னார்.

சபா, சரவாக்கில் அது போன்ற ஆய்வை நடத்த முடியவில்லை. அதனால் முழுமையாக இப்போது ஆராய முடியவில்லை.

அந்த இரண்டு மாநிலங்களிலும் தலா ஏழு இடங்களை பக்காத்தான் பிடிக்க முடியும் என அவர் நம்புகிறார் என்றாலும் கூடினபட்சம் 23 இடங்களை வெல்ல அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற இடங்களில் 125ஐ பிடிக்க முடியும் என பக்காத்தான் நம்புவதாகவும் லியூ சொன்னார். அதில் டிஏபியும் பாஸ் கட்சியும் தலா 40 இடங்களையும் பிகேஆர் 45 இடங்களையும் வெல்லலாம் என்றார் அவர்.