வடக்கில் தேர்தல் நடத்தினால் தனிநாடு உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

wimalகொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய சுதந்திர முன்னணிக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்துவது என்பது தமிழர்களுக்கு தனி நாடு உருவாகவே வழிவகுக்கும் என்பதால், நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

வடக்கு மாகாணக் கவுன்சிலை அமைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்றார். வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்தப்படுவதை வேறு சில சிங்கள இனவாதக் குழுக்களும் எதிர்க்கின்றன. இத்தேர்தலை நடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தலுக்குப் பின் தனிநாட்டுக்கான செயல்திட்டத்தை மேலும் தீவிரமாக வலியுறுத்தும் என்று அவை கூறி வருகின்றன.

TAGS: