அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது.
சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் சுகாதாரமற்ற அளவிலான க்ரோமியத்தை தங்களது உடலில் உட்கொள்ளுகிறார்கள் என்றும், இது வயிற்றில் ஏற்படும் கட்டிகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதைவிட அதிகம் பயன்படுத்துவர்கள் இந்த அலங்காரப்பொருட்களில் இருக்கும் பிற உலோகப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடும் என்று அது கூறுகிறது.
உதட்டுச் சாயத்தை குறைவாகப் பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் இந்த மாதிரி அலங்காரப் பொருட்களில் உலோகங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி தரக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த உலோகப்பொருட்கள் அலங்காரப் பொருட்களில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.