சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கொண்டு வரப்படுவதை பெர்சே சாடுகின்றது

bersihசந்தேகத்துக்குரிய ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு கடுமையான போட்டி  நிகழும் மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகளை பெர்சே கண்டித்துள்ளது.

அந்த முயற்சிகள் மலேசியா முழுவதும் உள்ள உண்மையான வாக்காளர்களுடைய விருப்பங்களை  அப்பட்டமாக மீறுவதாகும் என அது நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கையில் வருணித்தது.

“வாக்களிப்பு தினத்துக்கு முதல் நாள் மேற்கொள்ளப்படும் பல மோசடிகளினால் மலேசிய வரலாற்றில்  நெருக்கமானதாக இருக்கும் தேர்தல்கள் மக்களிடமிருந்து திருடப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது,” என  தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பு கூறியது.

“ஆகவே மலேசியர்கள் நாளை பெரும் எண்ணிக்கையில் வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என பெர்சே
கேட்டுக் கொள்கின்றது.”

“நீங்கள் நம்பக் கூடிய, நீங்கள் இனிமேலும் நம்ப முடியாத அரசியல்வாதிகள் பற்றி நீங்கள் சொந்தமாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.”

bersih1ஜனநாயகம் சீரழிக்கப்படுகின்றது என்பதையும் மலேசியர்கள் உணர்ந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும்  பெர்சே கேட்டுக் கொண்டது.

Pemantau அமைப்புக்கு கிடைத்துள்ள புகார்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால் இந்தத் தேர்தல்  மிகவும் கறை படிந்ததாக இருக்கும் என்று தான் ஆரூடம் கூறியது உண்மையாகி விடும் எனத்  தோன்றுவதாகவும் பெர்சே குறிப்பிட்டது.

“அந்த விவகாரம் மீது பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாம் மௌனமாக இருப்பதைக் கண்டு  நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். வாக்காளர் பட்டியல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை  எடுக்காமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.”

“தீவகற்பத்தில் வேலை செய்யும் நூறாயிரக்கணக்கான கிழக்கு மலேசியர்களுக்கும் சிங்கப்பூரில் வேலை செய்யும்  மலேசியர்களுக்கும் இசி அஞ்சல் வாக்குகளை மறுத்துள்ளது. இப்போது வாக்களிப்பதற்காக மக்கள் விமானங்களில் தீவகற்பத்துக்குக் கொண்டு வரப்படுகின்றனர்.”

ஆகவே நாளைய பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் இருக்கப் போவதில்லை. நியாயமானதாகவும் இருக்கப் போவதில்லை என பெர்சே கூறியது.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்காக அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல  “பிஎன் நண்பர்கள்” கட்டணம் செலுத்தி அந்த விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக  பிஎன்/அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர்கள் கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த “சந்தேகத்துக்குரிய” வாக்காளர்கள் என பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்வதை தெங்கு அட்னான் நிராகரித்தார்.