அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா

michelle-sisonசிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.

போர் வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டுமான வசதி மேம்பாடு, நிலக்கண்ணி வெடி அகற்றுதல் மற்றும் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் போன்றன தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் குறிப்பிட்டதனைப் போன்று இலங்கை அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சகல தரப்பினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அசாத் சாலிக்கு தேவையான சட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமெனவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் சிசன் தெரிவித்துள்ளார்.

TAGS: