இலங்கையில் தொடரும் பலத்த மழையினால் அந்நாட்டின் கொழும்பு நகரின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெலிகடை, தெஹிவளை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட சில பகுதிகளின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக போலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் நிலவுதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று காலை 8.30 முதல் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான 54.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளது.
தற்போது நாட்டின் பல மாகாணங்களிலும் பலத்த மழை பெய்துவருவதாக வளிமண்டலவியல் துறை குறிப்பிட்டுள்ளது.
நிலவும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.