மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை

maha1பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.

அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப் பெற்றுத்தந்த அப்துல்லாவைவிட நஜிப் சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்ததாகக் கூறினார்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தருவதாக அம்னோவிடமும் பிஎன் ஆதரவாளர்களிடமும் சூளுரைத்த நஜிப்பால் 133 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பெற்றுத்தர முடிந்தது. இது, 2008-இல் அப்துல்லாவுக்குக் கிடைத்ததைவிட எட்டு இடங்கள் குறைவாகும்.

தேர்தலில் நஜிப்பின் அடைவுநிலை குறித்து ஒரு முடிவான தீர்ப்பை அவர் சொல்லவில்லை ஆனால், அம்னோவுக்கு உள்ளும் புறமும் குறைகூறல்களையும் நிராகரிப்புகளையும் நஜிப் எதிர்நோக்கலாம் என்றார்.

“மக்கள் நிச்சயமாக அவரின் தகுதி குறித்தும் வியூகங்கள் குறித்தும் கேள்வி எழுப்புவர்”, என மகாதிர் மேலும் கூறினார்.

“அரசமைப்புப்படி அம்னோ ஆதரவு இருக்கும்வரை அவர் அரசாங்கத் தலைவராக இருப்பார்”.

பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தாம் நஜிப் நிர்வாகத்துக்காக தேர்தல் பரப்புரை செய்ததாகவும் அவர் சொன்னார்.