முன்கூட்டிய வாக்குகளைக் கொண்டிருந்த பெட்டிகள் முறையாக பாதுகாக்கப்பட்டனவா?

ballotமுன்கூட்டி அளிக்கப்பட்ட  வாக்குகளையும் அஞ்சல் வாக்குகளையும் கொண்ட பெட்டிகள்,  அழியா மையுடனும் வாக்களிப்பு நாளில் பயன்படுத்தப்படுவதகான வாக்குச் சீட்டுகளுடனும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பையும் மீறி எதுவும் நடந்திருக்கலாம் என  ஐயுறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே.

ballot1தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்கூட்டி அளிக்கப்பட்ட வாக்குகள் அடங்கிய பெட்டிகளைக் கண்காணிக்கலாம் என்றும் அவர்கள் விரும்பினால் அப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள போலீஸ் காவல் அறைகளில் படுத்தும் உறங்கலாம் என்றும் கூறி இருந்தார் என்றாரவர்.

“ஆனால், போலீசார் அதற்கு இடம்தரவில்லை. எங்கள் கட்சிப் பணியாளர்களை வெளியேற்றினார்கள்”,  என புஸியா கூறினார்.

“முன்கூட்டிய வாக்குகள் அடங்கிய பெட்டிகள், அஞ்சல் வாக்குகளைக் கொண்ட பெட்டிகள், அழியா மை, வாக்குச் சீட்டுகள் ஆகியவை ஒரே அறையில்தான்  வைக்கப்பட்டிருந்தன.  அங்கு அவை இருப்பதை நான் பார்த்தேன்.

“எங்கள் கட்சித் தொண்டர்கள் அவற்றை நாள் முழுக்கக் காவல் காக்க முற்பட்டபோது அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

“வாக்களிப்புக்கு ஒரு நாள் முன்னதாக, மே 4-இல், இசி அதிகாரிகள் அவற்றை எடுத்துச் செல்ல வந்தனர். தகவல் கிடைத்த நான், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த குவாந்தான் மாவட்ட போலீஸ் நிலையத்துக்குச் சென்றேன்.

“ஆனால், பெட்டிகள் எடுத்துச்செல்வதைப் பார்வையிட போலீசார் என்னை அனுமதிக்கவில்லை”.

போலீசார் துப்பாக்கிகளை நீட்டி மிரட்டியதாகவும் புஸியா தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நேரத்தில் வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றவர் சந்தேகப்படுகிறார்.

2008-இல் மாற்றரசுக் கட்சிக்கு கிடைத்த முன்கூட்டிய வாக்குகளும் அஞ்சல் வாக்குகளும் 20 விழுக்காடு என்றும் ஆனால், இவ்வாண்டு அது 10 விழுக்காடு என்பதுதான் சந்தேகம் கொள்ள வைக்கிறது என்று அவர் சொன்னார்.