சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் ஐக்கியத்தைச் சீர்குலைக்கக் கூடிய ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் பல மூத்த மாநில பிகேஆர் தலைவர்க குறித்து அந்த மாநில பாஸ் இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அந்த விவகாரம் மீது அம்னோ பல்லவிக்கு ஏற்ப பேசுவதற்கு முன்னர் பிகேஆர் துணைத் தலைவர்
அஸ்மின் அலி, மகளிர் தலைவி சுராய்டா கமாருதின், மாநில தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஷுஹாய்மி ஷாபியி ஆகியோர் சட்டமன்ற இடங்களில் காணப்படும் உண்மையான நிலையை முதலில் உணர வேண்டும்,” என மாநில பாஸ் இளைஞர் துணைத் தலைவர் சானி ஹம்சான் வெளியிட்ட அறிக்கை கூறியது.
“சிலாங்கூர் மந்திரி புசார் பதவி பிகேஆர் கட்சிக்கு நிரந்தரமாகச் சொந்தமானது என்ற எண்ணத்தில் அஸ்மின், சுராய்டா, ஷுஹாய்மி ஆகியோர் விடுக்கும் அறிக்கைகள் தங்கள் நிலையை, தங்கள் மதிப்பை மறந்து விட்டு பேராசையுடன் கூச்சல் போடுவதற்கு சமமாகும்.”
மாநிலச் சட்டமன்றத்தில் பாஸ் அல்லது டிஏபி-யைக் காட்டிலும் தனக்கு அதிகமான இடம் இருப்பதாக சிலாங்கூர் பிகேஆர் எண்ணக் கூடாது என சானி சொன்னார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் டிஏபியும் பாஸ் கட்சியும் தலா 15 இடங்களையும் பிகேஆர் 14 இடங்களையும் வைத்துள்ளன.
பிகேஆர் சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்றால் மந்திரி புசார் பதவி பிகேஆர்-க்குச் செல்லும் என உத்தரவாதம் அளிக்கும் ஏற்பாடு எதனையும் பக்காத்தான் கட்சிகள் செய்து கொள்ளவில்லை என்பதையும் சானி அனைவருக்கும் நினைவுபடுத்தினார்.
என்றாலும் மாநில பக்காத்தான் தலைமைத்துவம் எடுக்கும் எந்த முடிவுக்கும் சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கட்டுப்படும், மதிக்கும், ஆதரிக்கும் என அவர் சொன்னார். விரைவில் அந்த விவகாரம் தீர்க்கப்படும் என அவர் நம்புகிறார்.
சிலாங்கூர் மந்திரி புசார் தேர்வு மீது அஸ்மினும் பிகேஆர்-ல் உள்ள அவரது ஆதரவாளர்களும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
அந்தப் பதவி தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் மந்திரி புசார் வேட்பாளரை முடிவு செய்வது பிகேஆர் கட்சியின் உள் விவகாரம் எனக் கூறி
அவர்கள் பாஸ் கட்சியையும் டிஏபி-யையும் அதில் தலையிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள்.
தாம் மந்திரி புசாராவது உட்பட மற்ற எண்ணங்களும் அஸ்மின் அலிக்கு இருப்பதாக தகவல்கள் வெளியான போதும் நடப்பு மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இரண்டாவது தவணைக் காலத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என பாஸ் கட்சியும் டிஏபி-யும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன.