‘தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மூலம் பிஎன் அதிகாரத்தில் நீடிக்க முயற்சி செய்யலாம்’

voteநடப்பு தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டால் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு மேற்கொள்ள வேண்டிய  தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் -னுக்கு உள்ள  ஒரே நம்பிக்கை என டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் கூறுகிறார்.

மிகவும் குறுகிய பெரும்பான்மையில் பிஎன் வெற்றி கண்ட தொகுதிகள் ப்ல இருப்பதால் அவற்றைத் தக்க வைத்துக்  கொள்ள வேண்டிய தேவை அதற்குப் பக்காத்தானைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

“பக்காத்தான் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறி விட்ட போதிலும் பிஎன் இப்போது தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதை மறுக்க முடியாது,” என ஒங் இன்று நிருபர்களிடம் கூறினார்.

குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தொகுதிகள் பிஎன் -னுக்கு 46 என்றும் பக்காத்தானுக்கு 30 என்றும்  அவர் சொன்னார்.

“முக்கிய நாளேடுகளின் செல்வாக்கிற்குப் பலியாகாத இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் எல்லா இனங்களும் பக்காத்தானுக்கு ஆதரவு அளிப்பதாலும் பிஎன் 14வது பொதுத் தேர்தலில் அதிகாரத்தை இழக்கக் கூடும்.”

‘இவ்வாண்டு தொடக்கம் 14வது தேர்தலுக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய நேர்மையற்ற பொருத்தமற்ற தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே பிஎன் -னைக் காப்பாற்ற முடியும்.”

‘பிஎன் பக்காத்தானுடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை உள்ளது’

நாடாளுமன்றத் தொகுதிகள் சம்பந்தப்பட்ட எந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பும் நாடாளுமன்றத்தில் மூன்றில்  இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற வேண்டும் என்பதை ஒங் சுட்டிக்காட்டினார்.crowd1

“எல்லாத் தரப்புக்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய தேர்தல் எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையிலும்  பக்காத்தானுடன் ஒத்துழைப்பதைத் தவிர பிஎன் -னுக்கு வேறு வழி இல்லை,” என்றார் அவர்.

என்றாலும் பிஎன் புதிய நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்காமல் எல்லை மறுசீரமைப்பை, தேர்தல்  ஆணையத்தை மேற்கொள்ளுமாறு செய்து அந்தத் தடையை பிஎன் கீழறுப்புச் செய்து விட முடியும் என்பதை  ஒங் ஒப்புக் கொண்டார்.

“அது நிகழ்ந்தால் 2014ல் 200,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பல தொகுதிகள் (நகரங்களில்) இருக்கும். இது முழுக்க முழுக்க நியாயமற்றது.”

“இப்போது பக்காத்தான் செலுத்தப்பட்ட வாக்குகளில் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள போதிலும் மொத்த நாடாளுமன்ற இடங்களில் 40 விழுக்காடு மட்டுமே அதற்குக் கிடைத்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மறுசீரமைப்பின் போது அவை சரி செய்யப்பட வேண்டும்,” என்றார் அவர்.

தான் வலுவாக இருக்கும் நகர்ப்புறத் தொகுதிகளில் 100,000 வாக்காளர்களுடன் நாடாளுமன்ற இடங்கள் இருப்பதாக பக்காத்தான் புகார் செய்துள்ளது. அதே வேளையில் பிஎன் வலுவாக இருக்கும் கிராமப்புறங்களில் சில இடங்கள் 20,000 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளன.

“அடுத்த சுற்றில் பிஎன் வலுவாக இருக்கும் கிராமப்புறங்களில் அதிகமான இடங்களை உருவாக்க பிஎன் முயலக் கூடும். 100,000 வாக்காளர்களுக்கும் அதிகமாக 10 இடங்கள் உள்ள சிலாங்கூரில் அது இடங்களை அதிகரிக்காமல் போகலாம்,” என்ற புதிய செர்டாங் எம்பி-யுமான அவர் சொன்னார்.

 

TAGS: