இடிபாடுகளிலிருந்து 17 நாட்கள் கழித்து உயிரோடு மீண்ட பெண்

bangladeshவங்கதேசத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த-ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன.

கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்த அந்தப் பெண், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று கத்தியதைக் கேட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டுள்ளனர்.

அந்தக் கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த மற்றவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை உண்டும், கட்டிடத்தில் இருந்த குழாய் தண்ணீரைக் குடித்தும் அப்பெண் உயிர் பிழைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

எதிர்பாராத வகையில் ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளமை, மேலும் சிலர் இதேபோல மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரையே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. முக்கிய உறுப்புக்களில் ஏற்படும் காயங்களின் தன்மை இவர்கள் வாழ்வார்களா, சாவார்களா என்பதை நிர்ணயிக்கிறது.

இது போன்ற சமயங்களில், சம்பவம் நடந்த ஒரு வார காலத்துக்குப் பிறகு ஒரிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக யாரும் மீட்கப்படவில்லை என்றால் ஐநா தேடுதல் நடவடிக்கைகள் முடிந்ததாக அறிவித்துவிடும். ஆனால் இதற்கு முன்பு நடைபெற்ற பேரிடர் சமயங்களில் பல நாட்கள் கழித்து ஒரு சிலர் உயிரோடு மீட்டுள்ளனர்.

கடந்த 2005-இல் நடைபெற்ற காஷ்மீர் நிலநடுக்கத்தில் சிக்கிய நக்ஷா பிவி, தன் வீட்டின் சமையமலறையில் இடிபாடுகளுக்கிடைய மாட்டிக் கொண்டார்.

ஊசிப்போன உணவையும், கெட்டுப்போன நீரையும் உட்கொண்டு 63 நாட்கள் கழித்த நிலையில் அவர் உயிரோடு மீட்கப்பட்டார். ஹைத்தியில் 2010இல் நடைபெற்ற நிலநடுக்கத்தில் மாட்டிக் கொண்டு இவான்ஸ் மோசிக்நாக் என்பவர் 27 நாட்களுக்குப் பிறகு மீண்டு வந்தார்.

சாக்கடை நீரைக் குடித்து இவர் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார். பிலிப்பைன்சில் 1990இல் நிலநடுக்கத்தில் மாட்டிக் கொண்ட பெட்டிரியோ டே நீரையும், சிறுநீரையும் குடித்து 14 நாட்கள் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தார்.