எக்கானாமிஸ்ட் : நஜிப் வெற்றி ‘கறை படிந்தது’

BN13வது பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடைந்துள்ள வெற்றி, போலியானது என்றும் அது பிஎன் -னுக்கு சாதகமான தேர்தல் நடைமுறைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும்  எக்கானாமிஸ்ட் என்னும் பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகை வருணித்துள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல ‘உள் அம்சங்கள்’ ஆளும் கூட்டணிக்குச் சாதகமாக  இருந்த போதிலும் அந்தக் கூட்டணி பெரிய அளவில் வாக்குகளை வாங்கும் நடவடிக்கையில் இறங்கியதாக  அந்த சஞ்சிகை குறிப்பிட்டது.

“அரசாங்கம் ரொக்க வெகுமதிகளையும் மற்ற அன்பளிப்புக்களையும் வழங்கியது. அரசாங்கச் சேவையும் கட்சி அரசியல் கருவியாக இயங்குகின்றது. சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து வந்துள்ளது.”

“அடிமை போல இயங்கும் முக்கிய நாளேடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இருந்தும் பல பாரிசான் சேசனல் பரப்புரையாளர்கள் வாக்குகளை வாங்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதினர்,” என்று அந்த சஞ்சிகை தனது இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

economist1வரலாற்றில் மிக மோசமான அடைவு நிலையைப் பெற்றுள்ள பிஎன் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 47  விழுக்காட்டை மட்டுமே பெற்றுள்ளது. அதே வேளையில் பக்காத்தான் ராக்யாட் 51 விழுக்காடு வாக்குகளைப்  பெற்றது. ஆனால் நாடாளுமன்ற இடங்களில் 60 விழுக்காடு பிஎன் -னுக்கு சென்றுள்ளது.

“பிஎன் -னுக்குச் சாதகமாக தேர்தல் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதற்கு அது கூடுதல் ஆதாரமாகும். நகர்ப்புறங்களில் இடங்களை வெல்ல பக்காத்தான் அதிக வாக்காளர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் பிஎன் கிராமப்புற மலாய் தொகுதிகளில் குறைவான  வாக்காளர்களையே கவர வேண்டியிருந்தது.

‘நஜிப்பின் பிரிவினைவாத பிரச்சாரம்’

‘ஆவி வாக்காளர்கள்’ என்ற குற்றச்சாட்டுக்களுக்கு மேலாக நஜிப் ‘ஒர் எதிர்மறையான, இன ரீதியாக பிரிக்கின்ற,  மலாய் சார்பு’ பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

பிஎன் -னுக்கு ஏற்பட்ட பெரிய இழப்புக்கு ‘சீனர் சுனாமி’ என பிரதமர் சொல்லியிருக்கும் காரணம்
‘விவேகமில்லாதது’ என்றும் அது வருணித்தது. அதனால் மலாய் மொழி நாளேடுகள் சீனர் எதிர்ப்பு தலைப்புச் செய்திகளை வெளியிடுவதற்கு ஊக்கமூட்டப்பட்டன.

“அத்தகைய இனவாதச் சொற்கள் வழி தேர்தலை மதிப்பீடு செய்வது விவேகமும் அல்ல, துல்லிதமானதும் அல்ல.”

“இளைஞர்களும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் தங்களைச் சுற்றி நடக்கும் நியாயமற்ற போக்கு, நண்பர்களுக்கு உதவுவது, ஊழல் ஆகியவற்றைக் கண்டு வெறுப்படைந்துள்ளதே அந்த சுனாமிக்கு காரணமாகும்,” என்றும் எக்கானாமிஸ்ட் குறிப்பிட்டது.

மலாய் அல்லாத வாக்காளர்கள் ஆளும் கூட்டணியை ஒதுக்கியதற்கு மலாய் பெரும்பான்மைப் பகுதிகளில் அம்னோ மேற்கொண்ட ” பிரிவினைப் போக்குடைய, கறை படிந்த” பிரச்சாரமே காரணம். ஆகவே நஜிப் அம்னோ மீது தான் பழி போட வேண்டும் என்றும் அந்த சஞ்சிகை கூறியுள்ளது.

“பல இன மலேசியாவை மேம்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும் பாரிசானுடைய தேர்தல் வியூகம் நாட்டை முன்னைக் காட்டிலும் இன ரீதியாக மட்டுமின்றி நகர்ப்புற கிராமப்புறங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தி  விட்டது.”

economist2‘அன்வார் சொல்லும் பொதுத் தேர்தல் மோசடிகளும் மிகைப்படுத்தப்பட்டவை’

சுயேச்சை கண்காணிப்பாளர்கள் கண்டு பிடித்த தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படும் சம்பவங்கள்  ‘கடுமையானதாக’ இல்லை என்பதை சுட்டிக் காட்டிய அந்த சஞ்சிகை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்  இப்ராஹிம் கூறும் மோசடிகள் “கிட்டத்தட்ட நிச்சயம் மிகைப்படுத்தப்பட்டவை” எனத் தெரிவித்தது.

“தேர்தல் உருவாக்கிய கசப்புணர்வு தொடருகிறது. காயங்களைக் குணப்படுத்துவதற்கு ‘தேசிய சமரசம்’ ஒரு வழி  என நஜிப் கருதுகிறார். ஆனால் அதற்கு வெகு தொலைவு உள்ளது,”

நஜிப் அரசியலில் நிலைத்திருப்பதற்கு தமது சொந்தக் கட்சிக்கு மேலாக தமது செல்வாக்கைப் பயன்படுத்தி முன்னைக் காட்டிலும் துணிச்சலாக சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும்.

“ஆதரவு நடவடிக்கைகளை அகற்றும் பணியை முழுமையாக்க வேண்டும். சிவில் சமூக சுதந்திரங்களை மேலும்  மேம்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் முறையை நியாயமானதாக மாற்ற வேண்டும்,” என  அது மேலும் வலியுறுத்தியது.