பினாங்கில் 13வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பத்து பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர்.
அவர்களில் எழுவர் பினாங்குத் தீவிலும் மூவர் தலைநிலத்திலும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என அவர்களுடைய பேச்சாளரும் பாயான் பாரு எம்பி-யுமான சிம் சூ சின் கூறினார்.
அவர்களில் இருவர் பாஸ் வேட்பாளர்கள் என்றும் எண்மர் பிகேஆர் வேட்பாளர்கள் என்றும் அவர் சொன்னார்.
தேர்தல் குற்றங்கள் சட்டத்தில் 10வது பிரிவின் கீழ் நாங்கள் அந்தப் புகாரைச் சமர்பிக்கிறோம். அந்தப் பிரிவு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தேர்தலின் போதும் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக் கூடிய ஊழல் சம்பந்தப்பட்டதாகும். பினாங்கில் ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்துக்கு வெளியில் அவர் நிருபர்களிடம் பேசினார்.
கடந்த வெள்ளிக் கிழமை பினாங்கு பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹலிம் ஹுசேனும் சிம் -மும் அதே விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தனர்.
வெள்ளிக் கிழமை தொடக்கம் ஞாயிற்றுக் கிழமை வரையில் பாயான் பாருவிலும் பாலிக் புலாவ்-விலும் அதிர்ஷ்டக் குலுக்கு நடத்தப்பட்டதாக கூறப்படும் இடங்களுக்கு பிகேஆர் தலைவர்கள் வருகை அளித்தனர்.
தொகுதியைப் பொறுத்து 160 ரிங்கிட் முதல் 200 ரிங்கிட் வரையில் ரொக்கம் கொடுக்கப்பட்டதாக அப்துல் ஹலிம் கூறிக் கொண்டார்.
50 ரிங்கிட் முதல் 250 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுக்களை அவர்கள் பெற முடியும் என்றும் பிஎன்
வாக்காளர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக பிகேஆர் பாலிக் புலாவ் வேட்பாளர் பக்தியார் வான் சிக் சொன்னார்.
“பற்றுச்சீட்டுக்கள் தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்டன. அவற்றைப் பெற்றவர்களுடைய தொகுதிகளில் பிஎன் வெற்றி பெற்றால் பணம் கொடுக்கப்படும் என அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது,” என பக்தியார் குறுஞ்செய்தி ஒன்றில் குறிப்பிட்டார்.
“நாங்கள் பணம் விநியோகம் செய்யப்படும் மய்யத்திற்கு சென்றோம். அங்கிருந்த நபர்கள் மடிக்கணினிகளுடன் ஒடி விட்டார்கள்.”
டிஏபி ஆயர் ஹித்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வாய்-யும் தமது தொகுதியில் வாக்குகளை வாங்கும் நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக போலீசிலும் எம்ஏசிசி-யிடமும் புகார் செய்துள்ளார்.
“அந்த விவகாரம் பரிசீலினையில் இருப்பதாக எம்ஏசிசி எங்களிடம் கூறியது. இது வரையில் எந்த சாட்சியும் அழைக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை,” என வோங் விரக்தியுடன் சொன்னார்.
“எம்ஏசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால் அத்தகைய நடவடிக்கைகள் பெரிய அளவில் நிகழக் கூடும். ஏனெனில் பட்டப்பகலில் அது வீடியோ கேமிராக்களுக்கு முன்னால் கூட சம்பந்தப்பட்டவர்கள் அதனை செய்ய அஞ்சவில்லை.”