அண்மைய பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு பக்காத்தான் ராக்யாட் நடத்தும் ‘கறுப்புப் பேரணிகள்’ வன்முறையானதுடன் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் அம்னோவுடன் தொடர்புடைய பெரித்தா ஹரியானும் வருணனை செய்துள்ளன.
‘சட்ட விரோதப் பேரணிகளில் இளம் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்’ என முதல் பக்கத்தில் உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. “டிஏபி தொடர்ந்து தூண்டி விடுகிறது” என்னும் தலைப்பில் ஆறாம் பக்கத்தில் சீன பங்கேற்பாளர்களுடைய படங்களையும் அது வெளியிட்டுள்ளது.
கிளானா ஜெயாவில் புதன் கிழமை நிகழ்ந்த முதல் பேரணியில் ‘பத்தாயிரக்கணக்கான இளம் சீனர்கள்’
குவிந்தனர் என்றும் பத்து கவானில் சனிக்கிழமை நிகழ்ந்த இரண்டாவது பேரணியில் ‘பங்கு கொண்டவர்களில் 70 விழுக்காட்டினர் சீனர்கள்’ என்றும் அது கூறிக் கொண்டது.
“நாடு முழுவதும் நிகழவிருக்கும் அது போன்ற பேரணிகளுக்கு சீன இளைஞர்கள் தொடர்ந்து பிளவுபடாத விசுவாசத்தை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது,” என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.
இதனிடையே அந்த கறுப்புப் பேரணிகள் பற்றிக் குறிப்பிட்ட பெரித்தா ஹரியான் (நேற்றிரவு ஈப்போவில் நிகழ்ந்த பேரணியில் 30,000 பேர் கலந்து கொண்டனர்) சாலை ஆர்ப்பாட்டங்கள் மீது அன்வார் இப்ராஹிமுக்கு உள்ள ஆர்வத்தின் தொடர்ச்சி எனத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது நொறுக்கப்பட்ட போலீஸ் கார்கள், கவிழ்க்கப்பட்ட போலீஸ் மோட்டார் சைக்கிள்கள், போலீஸ் தடுப்பை ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் அகற்றுவது ஆகிய படங்களையும் தனது 12வது பக்கச் செய்தியில் அது பிரசுரித்துள்ளது. அந்தச் செய்திக்கு ‘சட்ட விரோதப் பேரணிகளுக்கு அன்வார் திட்டமிட்டார்’ என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
“அன்வார் இப்ராஹிமை யாருக்குத் தெரியாது, அரசாங்கத்தில் அவர் உயர்ந்த பதவியை வகித்தது முதல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரையில் இந்த நாட்டில் சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார்.”
1974ம் ஆண்டு பட்டினிக்கு எதிராக நடத்தப்பட்ட பாலிங் ஆர்ப்பாட்டம் தொடக்கம் 1998ல் நிகழ்ந்த ரிபார்மசி இயக்கத்துக்கும் அடுத்து இன்று வரையும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு அன்வார் வித்திட்டதாகக் கூறிக் கொண்டு அந்த ஏடு வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.
“பொதுத் தேர்தல் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தி எதிர்ப்பைத் தெரிவிக்க சாலைகளுக்குச் செல்லுமாறு சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் எல்லா வகையான தேச நிந்தனைகளாலும் அவதூறுகளினாலும் மக்கள் வெறுப்படைந்து விட்டனர்,” என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.