13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு ‘சீனர் சுனாமி’ காரணம் என பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசானும் சேர்ந்து கொண்டுள்ளார்.
அண்மைய தேர்தல் முடிவுகள் இளம் வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன் இணைந்த 2008 பொதுத் தேர்தலின் தொடர்ச்சி என அவர் நன்யாங் சியாங் பாவ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அவர் எடுத்துக்காட்டுக்கு 85 விழுக்காடு வாக்காளர்கள் மலாய்க்காரர்களாக உள்ள ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் வேட்பாளர் காலித் சமாட், பிஎன் வேட்பாளர் சுல்கிப்லி நோர்டினைத் தோற்கடித்ததை சுட்டிக் காட்டினார்.
அந்தத் தோல்விக்கு வேட்பாளர் தேர்வே காரணம் என முகமட் ஹசான் சொன்னார்.
எனவே சீனர் ஆதிக்கம் கொண்ட தொகுதிகளில் பிஎன் வெற்றி பெறத் தவறியதால் சீனர்கள் மீது பழி போடக் கூடாது என அவர் கருதுகிறார்.
“13வது பொதுத் தேர்தல் முடிவுகள் ‘சீனர் சுனாமியால்’ பாதிக்கப்பட்டதாக பலர் சொல்கின்றனர்,” என முகமட் ஹசான் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.
“மசீச-வையும் கெராக்கானையும் சீன வாக்காளர்கள் ஆதரிக்கவில்லை எனச் சொல்வதே பொருத்தமானது. அதே வேளையில் அம்னோவின் நிலை வலுவடைந்தது.”
அம்னோ 2008க்குப் பின்னர் தமது உருமாற்றத்தைத் தொடங்கியது என விளக்கிய அவர், மசீச-வும்
கெராக்கானும் 2008 பாடங்களுக்கு செவி சாய்க்கவில்லை என்றார்.
அவை மோசமான நிலையை அடைந்ததற்கு அவை தங்களது எதிர்வரும் கட்சித் தேர்தல்கள் காரணமாக
வெற்றி பெறும் வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் போனதும் காரணம் என அவர் கூறினார்.
ஒரு இனத்தை மட்டும் குறை சொல்ல கூடாது .இந்த தேர்தலில் பார்க்க போனால் எல்லா இனங்களும் மாற்று கட்சிக்கு அதிகஅளவில் வாக்களித்துள்ளனர் ….இதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து மக்கள் நலம் காக்கும் சேவை செய்ய வேண்டும் ….முதல் கட்டமாக எவரும் இந்த நாட்டில் இனத்து வேஷம் பேசுவதை தவிர்க்க வேண்டும் .நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வு வர வேண்டும் ……