வங்கதேசப் பிரஜைகளை பிரேசிலுக்குள் கடத்தும் கும்பல் பிடிபட்டது

bd_migrant_workersவங்கதேசப் பிரஜைகளை பிரேசிலுக்குள் கடத்தி வருவதில் கைதேர்ந்துவருகின்ற கும்பல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரேசில் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாதத்துக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி வங்கதேச இடைத்தரகர்களே தொழிலாளர்களைக் கூட்டி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் கடைசியில் இவர்கள் கட்டுமானத் தொழில்துறையில் கொத்தடிமைத் தொழிலாளிகளாகப் போய் சிக்கிக்கொள்கிறார்கள் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பெரு, பொலீவியா, கயானா போன்ற நாடுகள் வழியாக தம்மை பிரேசிலுக்குள் கொண்டுவந்து விட்டதற்காக சட்டவிரோதக் கும்பல்களுக்கு இவர்கள் பத்தாயிரம் டாலர் வரை பணம் கொடுக்க வேண்டி வருவதால் இந்நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெய்த்தி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருகின்ற சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை பெரூவை ஒட்டியுள்ள பிரேசில் மாநிலமான ஆக்ரியில் வேகமாக அதிகரித்ததை அடுத்து அம்மாநில ஆளுநர் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.