போலீஸ் சட்டவிரோதமானது என எச்சரிக்கை விடுத்தும் பினாங்கு எஸ்பிளனேட்டில் ‘நன்றி தெரிவிக்கும்’ பொருட்டு பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கம் நேற்றிரவு நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் கறுப்பு உடையை அணிந்திருந்தார்கள். மே 5 தேர்தலில் மோசடிகளும் வாக்குகளை வாங்குவதும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதற்கு எதிராக பக்காத்தான் ஏற்படுத்தி வரும் கறுப்பு 505 உணர்வு மேலோங்கியிருப்பதை அது காட்டியது.
“பெரும்பாலான நாடுகளில் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் பெரிய அலவில் சிவில் வேலை
நிறுத்தம் நிகழும்,” என அந்த நிகழ்வில் கடைசியாகப் பேசிய பக்காத்தான் தலைவர் அன்வார்
இப்ராஹிம் சொன்னார்.
“எங்களுடைய எல்லாக் கூட்டங்களிலும் அமைதியை நிலை நிறுத்தியதற்காக பிரதமர் நஜிப் ரசாக்
பக்காத்தானுக்கு நன்றி கூற வேண்டும்,” என்றார் அந்த முன்னாள் துணைப் பிரதமர்.
“பினாங்கு, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், பாகாங் ஆகிய எல்லா மாநிலங்களிலும் பேரணிகள்
அமைதியாக நிகழ்ந்துள்ளன. இருந்தும் அவை சட்டவிரோதமானவை என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொல்கிறார்.”
“நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் எங்கள் பேரணிகளை சட்டவிரோதமானவை
என அறிவிக்கலாம். ஆனால் அவர்கள் மக்கள் சக்தியை ஒரு போதும் நிறுத்த முடியாது. காரணம்
மக்கள் குரல் மிகவும் வலிமையானது,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
பொதுத் தேர்தலில் 30 இடங்கள் சம்பந்தப்பட்ட முடிவுகள் சந்தேகத்துக்குரியவையாக இருப்பதால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 48 விழுக்காடே கிடைத்த போதிலும் பிஎன் புத்ராஜெயாவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என அன்வார் சொன்னார்.
“மோசடியையும் திருட்டையும் ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் எங்களிடம் சொல்கின்றனர். உங்கள் வீடு அல்லது கார் உங்களிடமிருந்து திருடப்படுகின்றது. உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் நம்மிடம் சொல்கின்றனர். உண்மை நிலை !”
“இது மோசடி, இந்த மோசடியை எந்த மலேசியக் குடிமகனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்,” என அந்த பெர்மாத்தாங் எம்பி சொன்னார்.
“அம்னோ/பிஎன் வெற்றி பெற்ற இடங்களில் ஏமாற்று வேலைக்கான ஆதாரம் எங்களிடம் இல்லாவிட்டால் நாங்கள் அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்வோம்,” என அவர் வலியுறுத்தினார்.
“ஆனால் நாங்கள் தோல்வி கண்ட 30 இடங்களில் தேர்தல் மோசடிக்கான ஆதாரங்கள் எங்களிடம்
உள்ளன. நாங்கள் அந்த முடிவுகளை எதிர்ப்போம்,” என அன்வார் சூளுரைத்தார்.
அந்தப் பேரணியில் பேசிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மாநிலத்தை இன்னொரு தவணைக் காலத்துக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளித்த பினாங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவர் தமது ஆட்சிமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். அவர்கள் மக்களுக்குச் சேவை செய்வர் என அவர் சொன்னார்.
60,000க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக லிம் தமது உரையில் மதிப்பிட்டார்.
மக்களுக்கு ஒன்று கூடுவதற்கு உரிமை இருப்பதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது
உரையில் தெரிவித்தார்.
அந்த நிகழ்வு சட்டவிரோதமானது என மருட்டப்பட்ட போதிலும் துணிச்சலாக கூடியுள்ள
கூட்டத்தினரை அவர் பாராட்டினார்.
“இது சட்ட விரோதமான கூட்டம் அல்ல என்பதை போலீசாருக்கு நான் எச்சரிக்கிறேன். பொதுத்
தேர்தல் முடிவுகள் பற்றி தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்க பிரஜைகள் இங்கு ஒன்று திரண்டுள்ளனர்,”
என்றார் அந்த குளுகோர் எம்பி.
அந்த நிகழ்வு நள்ளிரவு வாக்கில் நிறைவடைந்தது. எஸ்பிளனேடுக்குச் செல்லும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். விரும்பதகாத சம்பவம் ஏதும் நிகழவில்லை. போக்குவரத்து நெரிசலும் இல்லை.
பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிக்கை விடுத்த புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ‘தேச நிந்தனைக்காக’ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி
தமது உரையில் கூறினார்.
அப்போது அவரது கருத்தை ஆதரித்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
“ஆனால் அதனைச் செய்யும் துணிச்சல் உண்டா ? இல்லை அவர் ஒரு கோழை,” என அந்த பிராய் சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.
ஆனால் இப்போது எங்கள் கவனம் எல்லாம் கெடாவில் என்ன நடக்கப் போகிறது என்பது தான்! முன்னாள் பிரதமரின் மகன் எப்படி ஆடப் போகிறார் என்பதைப் பார்ப்போம்! அப்பனின் புத்தி மகனுக்கும் இருக்குமா என கவனிப்பதில் ஒரு சுகமே!