நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு அமைச்சராக பதவி உறுதிமொழியா?

najibகடந்த வியாழக்கிழமை மே 16 இல், பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பேரரசர் இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேரரசர் பதவி உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

நஜிப்பின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களாக பேரரசரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு பதவி நியமனக் கடிதங்கள் பெற்ற அமைச்சர்களில் பால் லவ், மற்றும் அப்துல் வாஹிட் ஒமார் ஆகிய இருவரும், துணை அமைச்சர்களில் பி. வேதமூர்த்தி, டாக்டர் ஜெ. லோக பாலா மோகன் மற்றும்   அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா ஆகியோரும் அடங்குவர்.

அமைச்சராகவோ துணை அமைச்சராகவோ நியமிக்கப்படுபவர் நாடாளுமன்ற இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பேரரசர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து நியமனக் கடிதம் வழங்குவார்.

malaysia new cabinet 2013ஆனால், கடந்த வியாழக்கிழமை இஸ்தானா  நெகாராவில் பதவி உறுதிமொழி மற்று இரகசியக் காப்பு உறுதிமொழி சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்களான பால் லவ் மற்றும் அப்துல் வாஹிட் ஒமார் ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும், பி. வேதமூர்த்தி, டாக்டர் ஜெ. லோக பாலா மோகன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா ஆகிய மூவரும் துணை அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு நியமனக் கடிதங்களை பேரரசரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இந்த இரு அமைச்சர்களுக்கும் மூன்று துணை அமைச்சர்களுக்கும் பேரரசரால் செய்து வைக்கப்பட்ட பதவிப் பிரமாணமும் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 43 மற்றும் 43 A ஆகிய இரண்டும் பிரதமரின் ஆலோசனைப்படி பேரரசரால் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுபவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துள்ளன.

Federal Constitution Article 43. Cabinet

“43 (2) (b) he (Yang di-Pertuan Agong) shall on the advice of the Prime Minister appoint other Menteri (Ministers) from among the members of either House of Parliament.”

Article 43A. Deputy Ministers

“43A (1) Yang di-Pertuan Agong may on the advice of the Prime Minister appoint Deputy Ministers from among the members of either House of Parliament;”.

பிரதமர் நஜிப்பால் பரிந்துரைக்கப்பட்டு, பேரரசரால் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு நியமனக் கடிதங்கள் பெற்ற பால் லவ்வும், அப்துல் வாஹிட் ஒமாரும் மே 16 ஆம் தேதியன்று நாடாளுமன்ற இரு அவைகளில் எந்த ஓர் அவையிலும் உறுப்பினராக இல்லை. அவர்களை செனட்டர்கள் (நாடாளுமன்ற மேலவை) என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல. அவர்கள் இன்று வரையில் செனட்டராக செனட் அவைத் தலைவரின் முன்பு பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை.

அவ்வாறே, துணை அமைச்சர்களாக பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு பேரரசரால் துணை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு நியமனக் கடிதங்கள் பெற்ற பி. வேதமூர்த்தி, டாக்டர் ஜெ. லோக பாலா மோகன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா ஆகிய மூவரும் மே 16 ஆம் தேதியன்று செனட்டின் உறுப்பினராக இருக்கவில்லை. இன்று வரையில் அம்மூவரும் செனட் உறுப்பினர்கள் அல்லர்.

ஆக, மேலே குறிப்பிட்டுள்ள ஐவரும் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணங்கள், பேரரசரிடமிருந்து பெற்றுக் கொண்ட நியமனக் கடிதங்கள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவையாகும்.

அரசமைப்புச் சட்டத்தை மீறி நாடாளமன்றத்தின் எந்த ஓர் அவையிலும் உறுப்பினர்க:ளாக இல்லாதவர்களை அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்க பேரரசருக்கு பிரதமர் நஜிப் ஆலோசனை கூற வேண்டியதின் அவசியம், கட்டாயம் என்ன?

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படுவதுதான் நம்பிக்கை, நேர்மை, உருமாற்றம் ஆகியவற்றுக்கு பிரதமர் நஜிப் முன்வைக்கும் எடுத்துக்காட்டுகளா?

பேரரசரிடமே அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக ஆலோசனை கூறியிருக்கும் பிரதமர் நஜிப், மக்களிடம் உண்மையைக் கூறுவார் என்று எப்படி நம்புவது?

அரசமைப்பு சட்டத்தைப் புறக்கணித்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களை அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்க பேரரசருக்கு ஆலோசனை வழங்கியதன் வழி பேரரசருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியற்கும், நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியற்கும் பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாட்டின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கடந்த வெள்ளிக்கிழமை விடுத்திருந்த கோரிக்கைக்கு இன்று வரையில் எவ்விதப் பதிலும் இல்லை என்று அவர் நேற்று வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1lim11பிரதமர் நஜிப்பின் அரசமைப்புச் சட்ட மீறலை வன்மையாகக் கண்டித்த லிம் கிட் சியாங் இதனை ஒரு கேலிக்கூத்து என்று வர்ணித்துள்ளார்.

ஆம், வண்டியை குதிரைக்கு முன் நிறுத்துவது மடத்தனமான கேலிக்கூத்துதான். மே 16 இல் பேரரசரிடமிருந்து பதவிப் பிரமாணமும் நியமனக் கடிதமும் பெற்ற இரு அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் செனட்டர்களாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் ஜூன் முதல் வாரத்தில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவந்துள்ளது என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இல்லை. பிரதமரின் வழக்கமான மௌனம் ஆட்சி செய்கிறது.

ஆனால், அது வரையில் இந்த ஐவரும் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் செயல்படுவதை எந்தச் சட்டம் – அரசமைப்புச் சட்டமா அல்லது அம்னோ சட்டமா? – அனுமதிக்கிறது என்பதை பிரதமர் நஜிப் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், இந்த ஐவரும் தொடர்ந்து அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் செயல்படுவதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.