தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு

1abuசெனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை.

“எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர். இன்று இரண்டாம் தவணையாக செனட் (மேலவை) தலைவர் பதவியேற்ற அபு ஜஹார், பதவி ஏற்புச் சடங்குக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போதுதான் அவரிடம்  சில அமைச்சர்களின் நியமனம் சட்டப்பூர்வமானதுதானா என்று வினவப்பட்டது. ஆனால், அவர் அது பற்றி கருத்துரைக்க மறுத்தார்.

“அது பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் முறைப்படுத்துவோம்”, என்றார்.

ஏற்கனவே வந்த செய்திகளின்படி மற்ற செனட்டர்கள் ஜூன் 5-இல் பதவியேற்பார்கள்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,   இரண்டு அமைச்சர்களை- ட்ரேன்ஸ் பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியா தலைவர் பால் லவ், முன்னாள் மேபேங் சிஇஓ அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோரையும் துணை அமைச்சர்களான பி.வேதமூர்த்தி, ஜே. லோகபாலமோகன், அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா ஆகியோரையும்  புதிய அமைச்சரவைக்கு நியமனம் செய்தார்.

1 abu limஆனால், அவர்களில் எவரும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ மேலவை உறுப்பினர்களோ அல்லர்.

செனட்டர்கள் ஆக்கப்படாமலேயே அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் என்பதால் அவர்களின் நியமனம் சட்டவிரோதமானது என்பதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கடந்த வாரம் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அல்லது மேலவை உறுப்பினர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமனம் செய்ய முடியும் என்பதை லிம் வலியுறுத்தினார்.

‘கர்பால் அரசமைப்பை மதிக்க வேண்டும்’

டிஏபி தலைவர் கர்பால் சிங் மேலவை தேவையில்லை என்று கூறியிருப்பது பற்றி கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அந்த “நண்பர்” அரசமைப்பை மதிக்க வேண்டும், குழப்பம் தரும் அறிக்கைகள் விடுக்கக்கூடாது என்று அபு ஜஹார் குறிப்பிட்டார்.

“அவர் ஒரு வழக்குரைஞர். அரசமைப்பைப் படித்துப் பார்க்க வேண்டும்… மக்களுக்குக் குழப்பம் தரும் கருத்துகளைச் சொல்லக்கூடாது. பொறுப்பான தலைவராக இருக்க வேண்டும்”, என்றாரவர்.

அரசமைப்பு,  மெர்டேகா தொடங்கி மலேசியாவின் அமைதிக்கு, இணக்கத்துக்கு, வெற்றிக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. அதை மதிக்க வேண்டும் என்றவர் கேட்டுகொண்டார்.

மேலவை,  மக்களுக்கு வீண் செலவை ஏற்படுத்துகிறது என்றும் அது சட்டங்களில் மாற்றம் செய்ய எதுவும் செய்வதில்லை என்றும் அது அரசியலில் நிராகரிக்கப்பட்டவர்களைத் தூக்கிப் போடுமிடமாக  மாறி விட்டது என்றும் எனவே அது தேவையற்றது என்றும் கர்பால் கூறியிருந்தார்.