அமெரிக்காவில் பெரும் சூறாவளி : பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலி

oklahomaஅமெரிக்கா ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவில் 55,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்த சூறாவளிக்கு பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாயினர். சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 120-க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 70 பேர் குழந்தைகளாவர். இவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு உடனடியாக அவசரநிலை உதவிகள் வழங்க ஓக்லஹோமா கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்,

இது ஒரு பேரழிவு இயற்கைச் சீற்றம் என்று பிரகடனம் செய்துள்ள அதிபர் ஒபாமா, மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த டொர்னேடோ மணிக்கு 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியுள்ளது.