பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரையடுத்து கராச்சி பாராளுமன்றத் தொகுதி எண் 250-ல் உள்ள 43 வாக்குச்சாவடிகளில் கடந்த நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சாரா சாகித் உசைன் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் மறுவாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஒட்டுமொத்த தொகுதிக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று முத்தாகிதா குவாமி இயக்கம் வலியுறுத்தியது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எனவே, நேற்று நடந்த மறுவாக்குப்பதிவை முத்தாகிதா குவாமி இயக்கம் புறக்கணித்தது.
அங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மறுதேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளில் இம்ரான் கான் கட்சியின் வேட்பாளர் ஆரிப் ஆல்வி 17 ஆயிரத்து 489 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத்-இ-இஸ்லாமி வேட்பாளர் நய்மத்துல்லா கான் 446 வாக்குகளும் பெற்றனர்.
கராச்சி தொகுதியில் ஒட்டுமொத்த நிலவரப்படி, ஆரிப் ஆல்வி 77 ஆயிரத்து 659 வாக்குகள் பெற்று, முத்தாகிதா குவாமி இயக்க வேட்பாளர் குஷ்பக்த் ஷூஜாத்தை தோற்கடித்தார். ஷூஜாத் 30 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார்.
கராச்சியில் வெற்றி பெற்றது அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று ஆரிப் ஆல்வி தெரிவித்தார்.